சென்னை: தமிழகத்தில் கீழடி, கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர், கொங்கல் நகரம், மருங்கூர் ஆகிய 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் 15 லட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்று தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். தமிழக தொல்லியல் துறை நடத்திய அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழக வரலாற்றில் புதியவெளிச்சம் ஏற்பட்டுள்ளது. கீழடிஅகழாய்வு, தொல்லியல் நிபுணர்களிடம் மட்டுமின்றி, உலகத் தமிழர்களிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பண்டைத் தமிழ்சமூகத்தின் தொன்மை, பண்பாடு,தொழில்நுட்பம், விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழக தொல்லியல் துறைசார்பில் 2024-ம் ஆண்டில் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியான கொந்தகை, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூர் ஆகிய 8 இடங்களில் இப்பணிகள் நடைபெற உள்ளன.
» மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: வனத்துறை மறைப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு @ ஈரோடு
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், காணொலிமூலம் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார்.
முன்னதாக, இதே பகுதிகளில் கடந்த 2023 ஏப்ரல் 6-ம் தேதி பல்வேறு கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதில் கீழடியில், சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், தக்களி, வட்டச்சில்லு, அஞ்சனக்கோல், செப்புக் காசு, செப்புஊசி, இரும்பு ஆணி என 804 தொல்பொருட்கள் வெளிக்கொண்டு வரப்பட்டன. இதுதவிர, 4 அகழாய்வு குழிகளில், 35 செ.மீ. ஆழத்தில் களிமண், சுண்ணாம்பு கலவையால் அமைக்கப்பட்ட தரைதளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் கீழே 2 அடி ஆழத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருப்பு - சிவப்பு, சிவப்புபூச்சு, மற்றும் சிவப்பு நிற பானைஓடுகள் குவியலாக கண்டறியப்பட்டன.
கொந்தகையில் 3 நிலைகளில் 24 முதுமக்கள் தாழிகள், ஈமத்தாழியில் தந்தத்தால் செய்யப்பட்ட வளையம் ஆகியவை கண்டறியப்பட்டன. வெம்பக்கோட்டையில், 7,800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.
கீழ்நமண்டியில், 21 ஈமப்பேழைகள் கண்டறியப்பட்டன. ஒரு சிறிய குன்று மீது 30-க்கும் மேற்பட்ட கற்கோடாரி பட்டைதீட்டும் பள்ளங்கள் காணப்படுகின்றன.
பொற்பனைக்கோட்டையில் வட்ட வடிவ சுட்ட செங்கல் கட்டுமானம் 38 செ.மீ. ஆழத்தில் கண்டறியப்பட்டது. திருமலாபுரத்தில், வெண்மை நிற அலங்கார கிண்ணங்கள், மூடிகள், மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை ஓடுகள், ஈமத்தாழிகள், செம்பு கிண்ணம், இரும்பாலான ஈட்டி, வாள், குறுவாள், வில், கத்தி ஆகியவை கிடைத்தன.
சென்னானூரில் கருப்பு சிவப்புபானை ஓடுகள், கருப்பு வண்ண பானை ஓடுகள், சிவப்பு வண்ணபூச்சு பானை ஓடுகள், சொரசொரப்பான சிவப்பு வண்ண பானை ஓடுகள் அதிகம் காணப்படுகின்றன.
கொங்கல் நகரத்தில், இரும்புக்கால தளங்கள், பாறை ஓவியங்கள், இரும்புக்காலம் மற்றும் தொடக்க வரலாற்று பெருங்கற்காலத்தை சேர்ந்த எண்ணற்ற நினைவு சின்னங்கள் கிடைத்துள்ளன.
மருங்கூரில் வெளிர் சாம்பல் நிற ரவுலட் மண்பாண்டங்கள், கருப்பு - சிவப்பு பானை ஓடுகள் ஆகியவை சேகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொல்லியல் துறை சார்பில் தருமபுரி மாவட்டம் பெரும்பாலை தளங்களில் மேற்கொண்ட அகழாய்வின் அறிக்கை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 138 கல்வெட்டுகளின் விளக்க உரைகள் அடங்கிய தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி - 28 ஆகிய இரு நூல்களையும் நேற்று நடந்த நிகழ்வில் முதல்வர் வெளியிட்டார்.
இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாட்டு துறை செயலர் க.மணிவாசன், தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.