மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: வனத்துறை மறைப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு @ ஈரோடு

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: கோபி அருகே மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பெருமுகை ஊராட்சி கரும்பாறை பகுதியில், ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் மற்றும் அந்தியூர் வனச்சரகர் உள்ளிட்டோர் கரும்பாறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இறந்த ஆண் யானைக்கு 20 வயது இருக்கலாம் எனத் தெரிவித்த வனத்துறையினர், உடற்கூறு ஆய்வுக்கு பிறகே யானையின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்தனர். இந்நிலையில், மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: “அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கரும்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக மூன்று யானைகள் சுற்றி வருகின்றன. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அவை சேதப்படுத்தி வருகின்றன. இதைத் தடுப்பதற்காக, அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது. உரிய அனுமதி பெறாமல் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

மின்வேலியில் சிக்கி யானை இறந்த தகவல் காலையே வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாலை வரை வனத்துறை அதிகாரிகள் வரவில்லை. மாலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உடற்கூறு ஆய்விக்கிற்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியும் என்று கூறுகின்றனர்.

யானை இறந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் அவர்கள் ஆய்வு செய்தாலே, மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதை எளிதாக கண்டறிய முடியும். ஆனால், வனத்துறையினர் இறப்பிற்கான காரணத்தைத் தெரிவிக்காமல் மறைக்கின்றனர்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE