கால்வாயில் பெண் விழுந்த விவகாரம்: ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கோவை மாநகராட்சி உத்தரவு 

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை மாநகரில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வரும் கழிவுநீரை வெளியேற்ற, சாலையோர சாக்கடைத் திட்டம் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் பகுதிகளில் அடைப்புகள் சரி செய்ய ஆள் இறங்கும் வகையில் ‘மேன்ஹோல்’ என்ற பகுதி ஏற்படுத்தப்பட்டு இருக்கும். தற்போது மழைக்காலம் நெருங்க உள்ளதால் சாலையோர சாக்கடைகளை தூர்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், பாதாள சாக்கடைகளையும் அடைப்புகளை சரி செய்தல், கழிவுகளை அகற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, காந்திபுரம் நூறடி சாலையில் சாலையோரம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மேன் ஹோல்களில் அமைக்கப்பட்டுள்ள மூடியை திறந்து சமீபத்தில் பணிகள் மேற்கொண்டனர். அதில் சில மூடிகள் பழுதடைந்து இருந்ததாக தெரிகிறது. அவற்றை மாற்ற முடிவு செய்த ஒப்பந்ததாரர், மூடியை எடுத்துச் சென்று விட்டார். ஆனால், அப்பகுதியில் தடுப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை.

இதனால் அந்த மேன்ஹோல் பகுதி திறந்த நிலையிலேயே இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று (ஜூன் 17) நடந்து சென்ற பெண் ஒருவர், அந்த திறந்திருந்த பகுதியில் கால் தவறி விழுந்து காயமடைந்தார். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிப்பதிவு சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து திறந்திருந்த பாதாள சாக்கடை கால்வாய்களின் மூடிகளை உடனடியாக மூடினர்.

இதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் விசாரித்தார். தொடர்ந்து, மூடியை மூடி வைக்காமல் பணியில் அலட்சியம் காட்டிய ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து இன்று (ஜூன் 18) உத்தரவிட்டார். மேலும், இப்பணியை சரிவர கவனிக்க தவறிய, அந்த வார்டுக்குட்பட்ட உதவிப் பொறியாளர் முருகேசனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.

இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது,‘‘கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள், பாதாள சாக்கடை கால்வாய்கள் உள்ளன. இவற்றை பராமரித்த பின்னர், அவற்றுக்கான மூடிகளை உடனடியாக மூடி வைக்க வேண்டும். திறந்த நிலையில் காணப்படும் சாலையோர சாக்கடை கால்வாய்களுக்கும் மூடுபலகை அமைக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகத்தினர் அலட்சியம் காட்டக் கூடாது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE