உள்ளாட்சித் தேர்தல்: திமுக செய்த தவறுகள் என்ன?

By கே.கே.மகேஷ்

அதிமுக அரசு 5 ஆண்டுகளாக முடக்கி வைத்திருந்த உள்ளாட்சித் தேர்தல்களை, ஒருவழியாக நடத்தி முடித்திருக்கிறது திமுக அரசு. எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றதும் அவருக்கிருந்த பயம், பலவீனம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயங்கினார். ஆட்சி முடியப்போகிற நேரத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி ஆழம் பார்த்தபோது பலத்த அடி கிடைக்கவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அப்படியே கிடப்பில் போட்டார். இந்தப் பின்னணியில் ஆட்சிக்குவந்த திமுக, உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.

அதிமுகவுடன் ஒப்பிடுகையில், திமுக ஜனநாயகத்தை ஓரளவுக்கு மதிக்கிற கட்சி என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கும் அதேநேரத்தில், உள்ளாட்சித் தேர்தலை திமுக எதிர்கொண்டவிதம் சொந்தக்கட்சியினராலேயே விமர்சிக்கப்படுகிறது. சில இடங்களில் அதிமுக செய்த அதே தவறுகளை திமுகவும் செய்திருக்கிறது.

திமுகவின் மனநிலை

பத்து ஆண்டுகளுக்கு, திமுக ஆட்சிதான் என்ற மனநிலையில் தீர்க்கமாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவர் நினைப்பது போல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் திமுக ஆட்சி தொடர வேண்டுமென்றால், மக்களின் பூரண ஒத்துழைப்பும், நம்பிக்கையும் தேவை. அவர்களின் அதிருப்தியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, போக்கவேண்டிய கடமையும் அரசுக்கு உண்டு. இடையிடையே கட்சியின் பலத்தை பரிசோதித்துப் பார்ப்பதும் அவசியம். அப்படியான பரீட்சைகளில் ஒன்றே உள்ளாட்சித் தேர்தல். ஆனால், இந்தப் பரீட்சையில் படித்து பாஸாக வேண்டும் என்பதைவிட, பிட் அடித்தாவது பாஸாகிவிட வேண்டும் என்ற பதற்றமே இந்தத் தேர்தலில் திமுகவினர் மத்தியில் இருந்தது. அதனால், பல இடங்களில் கூட்டணிக் கட்சியினரும் உதாசீனப்படுத்தப்பட்டார்கள்.

கூட்டணி முரண்பாடு

இப்போதுள்ள திமுக கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலுக்கும் அப்படியே நீடிக்க வேண்டும் என்று மற்ற கட்சிகள் விரும்புகிறபோது, இந்த விஷயத்தை இவ்வளவு விட்டேத்தியாக திமுக அணுகியிருக்க வேண்டியதில்லை. காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கிற கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில்கூட நகராட்சித் தலைவர், மேயர் போன்ற பதவிகளை அந்தக் கட்சிக்காக ஒதுக்கவில்லை. திமுக கூட்டணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்றவற்றுக்கு மிகமிக சொற்பமான இடங்களே ஒதுக்கப்பட்டன. விளைவாக, பல மாவட்டங்களில் அந்தக் கட்சிகள் தனித்துப் போட்டியிடும் சூழலுக்குத் தள்ளப்பட்டன. சில ஊர்களில், கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளிலும் திமுகவினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது.

மற்றவர்கள் அமைதியாக இதை சகித்துக் கொண்டாலும், திருமாவும் அவரது கட்சி நிர்வாகிகளும் வெளிப்படையாகவே சொல்லி வருத்தப்பட்டார்கள். திமுகவின் இலக்கு 2024 மக்களவைத் தேர்தல் எனில், அதுவரையில் இந்தக் கூட்டணியை அப்படியே தொடர வேண்டிய பொறுப்பும் அதற்கு இருக்கிறது. இத்தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டதால், திமுகவும் அதிக இடங்களில் போட்டியிட்டாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது உண்மைதான். கூட்டணி கட்சிகளுக்கு இடங்களைத் தாராளமாக வழங்கி, அங்கெல்லாம் தோல்வியடைந்த அனுபவம் 2016 சட்டப் பேரவை தேர்தலில் பெற்றது திமுக என்பது மறுக்க முடியாத உண்மைதான். உள்ளாட்சித் தேர்தலில் அத்தகைய தவறுகள் நடக்கக்கூடாது என்றால், கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் வார்டுகளிலும் திமுகவினர் கூட்டணி தர்மத்துக்குக் கட்டுப்பட்டு கடுமையாக உழைத்து அவர்களையும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும் திமுக தலைமை.

வேட்பாளர் தேர்வில் சொதப்பல்

இந்தத் தேர்தலில் எம்எல்ஏக்களோ, அமைச்சர்களோ தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் கேட்கக்கூடாது என்று திமுக தலைமை உத்தரவிட்டது பாராட்டுக்குரிய விஷயம். அது ஓரளவுக்கு கடைபிடிக்கவும்பட்டது. ஆனால், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், மாவட்டச் செயலாளர்களும் சீட்டுகளை பங்கு போட்டுக்கொண்டதையும், பணம் வாங்கிக்கொண்டு வாய்ப்பு கொடுத்ததையும், தங்கள் சாதிக்காரர்களுக்கு முன்னுரிமை கொடுத்ததையும் பரவலாகப் பார்க்க முடிந்தது. ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் எம்பி, எம்எல்ஏ சீட்டுகளே சாமானியனுக்கும் சாத்தியமானது. இன்னும் சொல்லப்போனால் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர், கவுன்சிலராக இருந்தவர்களை எல்லாம் அமைச்சரவை வரைக்கும் அழைத்து வந்து அழகுபார்த்தார் ஜெயலலிதா. விளைவாக, அவரது காலத்தில் அதிமுக மிகப்பெரிய இயக்கமாக வளர்ந்தது.

திமுகவில் அமைச்சரவையும் மாறாது, வேட்பாளர் பட்டியலும் மாறாது. எல்லாத் தேர்தல்களிலும் அவர்களுக்குத்தான் திரும்பத் திரும்ப வாய்ப்புத் தருவார்கள் என்ற குற்றச்சாட்டு காலங் காலமாகவே உண்டு. அது இன்றளவும் மாற்றமின்றித் தொடர்கிறது. குறைந்தபட்சம் உள்ளாட்சித் தேர்தலிலாவது, கட்சிக்காக உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கு முன்னுரிமை தந்திருக்கலாம். அதுவும் இல்லாமல் போனதுதான் பிரச்சினை. இது கட்சியை வளர்ப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே கட்சிக்காக சுறுசுறுப்பாக உழைத்தவர்களையும் சோர்வடையச் செய்துவிட்டது.

பல ஊர்களில் மாவட்ட, நகரச் செயலாளர்கள் தங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களையுமே வேட்பாளராக நிறுத்தினார்கள். மக்கள் செல்வாக்குள்ள, கட்சிக்காக உழைத்தவர்கள் தங்களுக்கு சீட் தரப்படாதது குறித்து, அறிவாலயம் வரையில் முறையிட்டும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. (உதாரணம், புதுக்கோட்டை நகரச் செயலாளர் நைனா முகமது). இதனால் அதிருப்தியடைந்த திமுகவினர் சிலர், ‘போங்கய்யா... நீங்களும் உங்கக் கட்சியும்...’ என்று ஒதுங்கிவிட்டாலும், இன்னும் சிலரோ ‘இது என்னுடைய கட்சி, என்னுடைய வார்டு. மக்கள் முடிவுசெய்யட்டும்’ என்று சுயேச்சையாக களத்தில் நிற்கிறார்கள். இவர்களுக்கு வாய்ப்பு மறுத்த நிர்வாகிகள், இப்படி சுயேச்சையாக களமிறங்கியவர்களின் பெயர்ப் பட்டியலை தலைமைக்கு அனுப்ப, அவர்களை எல்லாம் கொத்துக்கொத்தாக கட்சியை விட்டு நீக்கிக் கொண்டிருக்கிறார் பொதுச்செயலாளர் துரைமுருகன். இதுவரையில் சுமார் 200 பேர் அப்படி நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறியது நிச்சயம் தவறுதான். ‘பாஸ் எடுத்த முடிவு தவறாகவே இருந்தாலும், அவரது சொல்லை அப்படியே கேட்டு நடக்க வேண்டும்’ என்பது கார்பரேட் கம்பெனிகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஜனநாயக இயக்கத்துக்கு எப்படிப் பொருந்தும்? இவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததைப் போலவே, வாக்குப்பதிவு முடிந்த பிறகாவது வேட்பாளர் தேர்வில் விளையாடிய நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக தலைவர். அப்போதுதான், அடுத்த முறை சீட் கொடுக்கும்போது தகுதியான நபர்களைப் புறந்தள்ளாமல் இருப்பார்கள். அடுத்த முறையும் மு.க.ஸ்டாலின் முதல்வராகத் தொடர வேண்டும் என்றால், அவரை உள்ளங்கையில் வைத்துத்தாங்கும் தொண்டர்களும், களப்பணியாளர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர்களை நொந்துபோக வைப்பது, நிச்சயம் கட்சிக்கு பாதகத்தையே ஏற்படுத்தும் என்பதை திமுக தலைமை உணர வேண்டிய தருணம் இது. தேர்தல்தான் முடிந்துவிட்டதே என நினைக்காமல், இந்தத் தேர்தலில் கட்சியின் அடிநாதமாய் இருக்கும் விசுவாசத் தொண்டர்கள் எப்படி எல்லாம் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, திமுக தலைமை ஒரு விசாரணை கமிஷனே வைக்கலாம்.

பசையில்லாத தொண்டர்கள்

10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருந்த கட்சி திமுக. பரம்பரை திமுகவினரும், கொள்கை கோட்பாடு என்று பேசிக்கொண்டிருப்பவர்களும் தங்கள் வறுமையையும் பொருட்படுத்தாமல் “தளபதி வாழ்க... திமுக வாழ்க” என்று கோஷமிட்டுக்கொண்டிருக்க, பிழைப்புவாதிகள் எல்லாம் கட்சி மாறியும், திரைமறைவு தொடர்புகளை வலுப்படுத்தியும் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள். பத்தாண்டு காலமாக கட்சிக்காக அடிபட்டு மிதிபட்டுக் கிடக்கும் திமுக தொண்டன், இதையெல்லாம் ஏக்கத்துடனும் ஆதங்கத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கிறான். “அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், எம்பிக்களும் தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்களே தவிர, கீழ்மட்ட நிர்வாகிகளை கண்டுகொள்வதே இல்லை” என்கிற குரல் தமிழ்நாடு முழுக்க ஒலிக்கிறது.

அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சார்பில் எப்படி மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகளுக்கு மாதந்தோறும் ஒரு தொகை வழங்கப்பட்டதோ, அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவினருக்கும் வழங்கப்படும் என்பதை வேறு வார்த்தைகளில், கட்சி சாராத நபர்களுக்குப் புரியாத மொழியில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மானாமதுரையில் சொன்னார் ஸ்டாலின். ஆனால், அந்த வாக்குறுதியை எந்த அமைச்சரும், மாவட்டச் செயலாளரும் இதுவரையில் நிறைவேற்றவில்லை. காசு பணம் கூட பரவாயில்லை, தங்கள் மகன், மகள், பேரன், பேத்தியின் பணியிட மாற்றம் தொடர்பாக அமைச்சர்களை அனுகினால், “இந்த ஆட்சியில் எல்லாம் வெளிப்படையாகத்தான் நடக்கும். யாரும் சிபாரிசுக்காக வர வேண்டாம்” என்று கட்சிக்காரர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

‘கீழ்மட்ட நிர்வாகிகளை இப்படி உதாசீனப்படுத்திவிட்டு, மேல்மட்ட நிர்வாகிகள் மட்டும் ஆட்சியின் பலாபலன்களை அனுபவிக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில், ‘அடிமட்டத் தொண்டர்கள் வேலைபார்க்காமல் ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது’ என்பதுதான் எதார்த்தம். வாக்காளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைப் போலவே, கட்சியினருக்குக் கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது தலைமைக்கு.

பணப்பட்டுவாடா

எப்படியாவது வெற்றிபெற்று தலைமையிடம் நல்லபெயர் வாங்குவதற்காக, பல இடங்களில் அதிமுக பாணியில் திமுக பணப்பட்டுவாடாவை பக்காவாகச் செய்திருக்கிறது. ஆட்சிக்கு வந்து ஒன்பதே மாதத்தில் எவ்வளவு பணம் சேர்த்துவிட்டார்கள் பார்த்தீர்களா? என்று எதிர்க்கட்சிகளையும், வாக்காளர்களையும் பேச வைக்கவே இது பயன்பட்டிருக்கிறது. இன்னொரு புறம், ‘இப்படிப் பணப் பட்டுவாடா செய்தவர்கள், ஒன்றுக்குப் பத்தாகத் திரும்ப எடுக்க நினைப்பார்களே... அதை எப்படி தடுக்கப் போகிறார் ஸ்டாலின்?’ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதற்குப் பதிலாக, அதிமுக வலுவாக இருக்கிற சில ஊர்களில் அவர்களை வெல்லக்கூட விட்டிருக்கலாம். அது தேர்தல் நேர்மையாக நடந்ததற்கான அத்தாட்சியாக இருந்திருக்கும், திமுகவின் உண்மையான பலத்தை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்திருக்கும்.

‘ஆரம்பகட்டத் தவறுகள்தான் இவை. சரிசெய்யவே முடியாத தவறுகள் அல்ல’ என்பதை திமுக உணரும் என்று நம்புவோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE