பல்லடம் அருகே முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்துக்கு சீல்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: பல்லடம் அருகே முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்துக்கு சீல் வைத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் கனகராணி, பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாலட்சுமி, அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபால கிருஷ்ணன் மற்றும் இளநிலை உதவியாளர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் பல்லடம் இடுவாய், சின்னக்காளிப்பாளையம் பகுதியில் உள்ள கிளினிக் மற்றும் மருந்தகத்தில் இன்று (ஜூன் 18) திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியில் இருந்த கிளினிக்கில் டாக்டர் மார்சல் முகேஷ் ஆண்டனி எம்.பி.பி.எஸ். என்று பெயர் பலகையில் இருந்தது. ஆனால் அங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய கல்வி தகுதி இல்லாத, அதே இடத்தில் இருந்த மருந்தக உரிமையாளர் லிட்டில் ப்ளோரா என்பவர் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் கேட்டனர். அப்போது லிட்டில் ப்ளோரா தான் சிகிச்சை அளித்து வந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் மருத்துவர் மார்சல் முகேஷ் ஆண்டனி என்பவரை தொடர்பு கொண்ட போது, தான் அங்கு வருவதில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதையடுத்து முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மருத்துவர் மெர்சல் மகேஷ் ஆண்டனி, லிட்டில் ப்ளோரா, மருந்தகத்தில் வேலை பார்த்த நளினி ஆகியோர் வரும் 21-ம் தேதி தகுந்த ஆதாரங்களுடன் இணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE