மழைநீர் வடிகால் அமைக்க கவுண்டம்பாளையம் அர்ச்சனா கார்டன் பகுதி மக்கள் கோரிக்கை

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை மாநராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் அர்ச்சனா கார்டன் பகுதி மக்கள் மழைக் காலத்தில் தங்கள் குடியிருப்பில் தண்ணீர் குளம் போல் தேங்குவதாகவும் அந்த தண்ணீரை வெளியேற்ற வடிகால் அமைத்துத் தரும்படியும் இன்று நடைபெற்ற மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் மேயரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் மாவட்ட மேயர் மற்றும் தலைமை ஆணையர் கலந்துகொண்டு, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் பிரச்சினைகளை கோரிக்கை மனுக்கலாக அளிப்பா். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்காக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், கடந்த மூன்று மாதங்களாக மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் கடந்த வாரம் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் இன்று (ஜூன் 18) வழக்கம் போல் நடந்தது. இக்கூட்டத்துக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இக்கூட்டத்தில் 34-வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம் அர்ச்சனா கார்டன் பகுதி மக்கள் அளித்த மனுவில், ”அர்ச்சனா கார்டன் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. எங்கள் குடியிருப்புப் பகுதியை சுற்றியுள்ள இடங்கள் உயரமான இடத்தில் உள்ளது. எங்கள் குடியிருப்புப் பகுதி பள்ளமான பகுதியில் அமைந்துள்ளது. இதனால் மழைக் காலங்களில், மழை நீர் எங்கள் குடியிருப்புப் பகுதியை சூழ்ந்து குளம் போல் தேங்கிக் கொள்கிறது.

தேங்கிய மழைநீர் விரைவாக வடிந்து வெளியேற போதிய மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் எதுவும் இல்லை. இதனால் மழைக் காலங்களில் 2 நாட்களுக்கு மழைநீர் குளம் போல் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் வெளியே செல்ல முடியாது. வெளியே வசிப்பவர்கள் உள்ளே வர முடியாது. இதற்கு சரியான தீர்வு காண வேண்டும். மேலும், அதிகரித்து காணப்படும் கொசுத் தொல்லையை தடுக்கவும் தீர்வு காண வேண்டும்” எனக் கூறப்பட்டது.

அதேபோல், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் விரைவாக வழங்க வேண்டும், பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக மக்கள் மனு அளித்தனர். மொத்தம் 30 மனுக்கள் இம்முகாமில் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் உத்தரவிட்டனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர்கள் செல்வ சுரபி, சிவக்குமார் மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE