கணக்குப்போட்டு கட்சிமாறி வந்தவர்களுக்கு கச்சிதமாய் அல்வா!

By என்.சுவாமிநாதன்

மற்ற இடங்களைப் போலவே, திருநெல்வேலி மாநகராட்சியைக் கைப்பற்றவும் ஆளும்கட்சியான திமுகவுக்கும் ஆண்டகட்சியான அதிமுகவுக்கும் இடையே போட்டி கடுமையாகவே இருக்கிறது.

அப்துல் வகாப் எம்எல்ஏ

தென்மாவட்டங்களில் மதுரைக்கு அடுத்தபடியாக மாநகராட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது திருநெல்வேலிதான். 1996-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருநெல்வேலியின், முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி இருந்தார். இதுவரை நடந்திருக்கும் 4 மாநகராட்சித் தேர்தல்களில் திமுக இருமுறையும், அதிமுக இருமுறையும் மேயர் பதவியைக் கைப்பற்றியிருக்கின்றன. கடைசியாக இந்த மாநகராட்சி அதிமுக வசம் இருந்தது.

மொத்தம் 55 வார்டுகளைக் கொண்ட இங்கு, திமுகவும் அதிமுகவும் கட்சி ரீதியாக சம பலத்துடன் உள்ளன. எனினும் தனித்துவிடப்பட்ட அதிமுகவை கூட்டணி பலத்துடன் நிற்கும் திமுக சற்று செருக்குடனே பார்க்கிறது. பாஜக, தேமுதிக, அமமுக கட்சிகள் தனித்து நிற்பது அதிமுகவுக்கு சவால். இதனால் இப்போதே ஜெயித்துவிட்ட மிதப்பில் இருக்கும் திமுக, அடுத்தகட்டமாக மேயர், துணை மேயராக யாரைத் தேர்வு செய்யலாம் என்ற டிஸ்கஷனுக்குப் போய்விட்டது.

சுப்பிரமணியன்

கூட்டணி பலம் இல்லாத சோகம் ஒருபக்கம் இருக்க, அதிமுகவில் முன்னாள் மேயர்கள் தொடங்கி, மாநகராட்சியில் பொறுப்புகளில் இருந்த முக்கிய கவுன்சிலர்கள் வரை கூண்டோடு கட்சி மாறி திமுகவுக்கு சென்றுவிட்டனர். இதனால் அனைத்து வார்டுகளிலும் புதுமுகங்களை களம் இறக்கியுள்ளது அதிமுக. ஸ்டார் வேட்பாளர்கள் என அதிமுக சார்பில் களத்தில் யாருமே இல்லாததும் அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவுதான்.

திமுக கூட்டணியில் 47 வார்டுகளில் திமுகவும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், மதிமுக 2 வார்டுகளிலும், மனிதநேய மக்கள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன. அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று. பக்கத்து மாவட்டங்களான தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் என இருவரும், கன்னியாகுமரியில் மனோதங்கராஜும் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் அனைவருமே நாடார் சமூகம் என்பதால், நெல்லை மாநகர மேயர் பதவியையேனும் தேவர் சமூகத்துக்கு ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது. ஆனால், மாநகரப் பகுதியில் பிள்ளைமார் சமூக வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டி, மேயர் பதவியை பிள்ளைமார் சமூகத்துக்கே தரவேண்டும் என இப்போதே சிலர் கொடிபிடிக்கிறார்கள்.

கே.ஆர்.ராஜூ

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், அவரது மகன் பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏவான மாலைராஜா ஆகியோரது பரிந்துரைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் சிபாரிசு செய்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித் திருக்கிறது திமுக தலைமை. இதனால் மற்ற கோஷ்டிகள் பெரும் அதிருப்தியில் இருக்கின்றன. மேயர் கனவில் இருந்த மாலைராஜாவின் வேட்பு மனுவையும் அவரிடம் பேசியே வாபஸ் பெறவைத்துவிட்டார் அப்துல் வகாப். தச்சை மண்டல முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், அப்துல்வகாபின் குட் புக்கில் உள்ளார். தேவர் சமூகத்துக்கு வாய்ப்பு என்றால், சுப்பிரமணியன் மேயர் ரேஸில் முன்வரிசையில் இருப்பார் என்கிறார்கள்.

நெல்லை மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் ராஜ கண்ணப்பன், தனது யாதவ சமூகத்தைச் சேர்ந்த கே.ராஜூ என்பவரை மேயர் பதவிக்கு முன்னிறுத்துவதாகச் சொல்கிறார்கள். இவருக்கும் வகாபின் பரிபூரண ஆதரவு இருக்கிறது. யாதவ சமூகத்தினர் அதிகமாக இருக்கும் வார்டில் போட்டிடும் ராஜூ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மாதவ ராமானுஜனை ‘வளமாக’ பேசி போட்டியி லிருந்து ஒதுங்கவைத்துவிட்டார். இதன் பின்னணியை விசாரித்த அதிமுக தலைமை, மாதவ ராமானுஜத்தை கட்சியை விட்டு நீக்கியது.

இந்த இருவர் மாத்திரமல்லாது நெல்லை மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் கோட்டை கருப்பசாமி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகேஷ்வரி, வில்சன், டாக்டர் சங்கர், முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் மகள் ரேவதி என திமுகவில் ஒரு டஜன் பேர் மேயர் கனவுடன் உலா வருகின்றனர்.

விஜிலா சத்யானந்த்

திருநெல்வேலி என்றாலே அல்வா தான் ஃபேமஸ். அதை அதிமுகவிலிருந்து தாவி வந்தவர்களுக்கு கணக்காக கொடுத்திருக்கிறது திமுக தலைமை. முன்னாள் எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, பள்ளிக்கோட்டை செல்லத்துரை உள்ளிட்ட பலரும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்தே திமுகவுக்குத் தாவினர். அதன்படி கவுன்சிலர் சீட் கேட்ட இவர்களில், ஒருவருக்கும் மறந்தும்கூட சீட் கொடுக்கவில்லை திமுக தலைமை.

நயினார் நாகேந்திரன்

சட்டப் பேரவைத் தேர்தலில் நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றிபெற, அதிமுக கூட்டணியும் ஒரு முக்கிய காரணம். ஆனால், இப்போது அதிமுக தங்கள் பக்கம் இல்லாததால் தனித்து களத்தில் நிற்கும் நயினார், ஒன்றிரண்டு வார்டுகளிலாவது தாமரையை மலரவைக்க வேண்டிய கட்டாயத்தில் நெளிகிறார். ஆனால், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளைப் போலவே பாஜகவும் இங்கே டெபாசிட்டை காக்கவே வரிசையில் நிற்கிறது பாஜக என நக்கலடிக்கிறார்கள் திமுகவினர்.

கடைசிகட்ட நிலவரப்படி, நெல்லை மாநகராட்சி தேர்தலில் அதிமுகவைவிட பலபடி முன்னே நிற்கிறது திமுக. தனிப்பெரும்பான்மையுடன் நெல்லை மாநகராட்சியை கைப்பற்றிவிடும் தெம்பில் இருக்கும் திமுகவுக்கு, மேயர் கனவில் இருக்கும் பத்துக்கும் மேற்பட்டவர்களை சமாளிப்பது நிச்சயம் பெரும் சவாலாகத்தான் இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE