ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்டங்களில் பேசும்படியான இடங்களைப் பிடித்த நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர், அந்தத் தெம்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் களத்தில் நிற்கிறார்கள். சென்னை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும், தங்களுக்கு சாதகமாக கருதப்படும் நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் இருக்கிறார்கள்.
இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் தனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபத்தால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து கவனத்தை ஈர்த்தார் விஜய். ஒரு கட்டத்தில் அந்தத் தரப்பிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ராகுல் காந்தியை சந்தித்தார் விஜய். அதைவைத்து, அவர் காங்கிரஸில் இணையலாம் என செய்திகள் வந்தன. இப்படி தன்னையும் அறியாமல் தன்னைச் சுற்றி அரசியல் வலையைப் பின்னிக் கொண்டதால், ரெய்டுகள் உள்ளிட்ட பாதிப்புகளையும் அதிகம் எதிக்கொண்டார் விஜய். மத்தியில் ஆளும் பாஜகவுடன் இன்றுவரை அவருக்கு உரசல் நீடிக்கிறது.
அரசிலைப் பற்றி அதிகம் பேசாமல் இருந்தாலும், அரசியலையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கான ஆழம் பார்க்கும் நடவடிக்கையாகவே 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தனது விஜய் மக்கள் இயக்கத்தினர் களத்தில் இறங்க சிக்னல் கொடுத்தார் விஜய். இதையடுத்து, துணிந்து களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்தது.
இந்த வெற்றியால் அகம் மகிழ்ந்தார் விஜய். வெற்றிபெற்ற தனது இயக்கத்தின் தம்பிகளை நேரில் வரவழைத்துப் பாராட்டினார். அந்த வழிதொட்டு இம்முறை விஜய் மக்கள் இயக்கம் யாருடனும் கூட்டணி இல்லை என அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டு, களத்துக்கு வந்தது. விஜயின் இந்த நிதானமான நடவடிக்கை களை கவனித்து வருபவர்கள், “அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக களத்துக்கு வர நினைக்கும் விஜய், பெரிய மீனைப் பிடிக்க உள்ளாட்சித் தேர்தலில் சின்ன மீன்களை விட்டு ஒத்திகை பார்க்கிறார்” என்கிறார்கள்.
இந்தத் தேர்தலிலேயே தேர்ந்த அரசியல் கட்சிகளுக்கான அத்தனை லட்சணங்களையும் விஜய் மக்கள் இயக்கமும் பெற்றுவிட்டது. புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பர்வேஸ், புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டில் வேட்பாளராக களத்தில் நிற்கிறார். இவரையும் சேர்த்து அங்கே 3 வார்டுகளில் மக்கள் இயக்கம் களம்காண்கிறது. அறந்தாங்கி நகராட்சியில் ஒருவரும், பேரூராட்சிகளில் 8 பேருமாக மாவட்டத்தில் மொத்தம் 12 பேர் இந்த மாவட்டத்தில் களத்தில் நிற்கிறார்கள்.
தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்திருந்த சமயத்தில், பர்வேஸிடம் கன்னி தேர்தல் அனுபவம் குறித்து கேட்டபோது, ’’மாவட்டத்தில் மொத்தம் 300 பேருக்கு மேல் விருப்ப மனு கொடுத்து இருந்தார்கள். இன்னும் கட்சியாகப் பதிவு பெறவில்லை. அதனால் அவசரப்பட வேண்டாம் என்று முடிவெடுத்து, யாருக்கெல்லாம் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று ஆராய்ந்து அவர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பளித்திருக்கிறோம். அதனால், நிச்சயமாக அனைவருமே வெற்றி பெற்று தளபதி விஜயின் பெருமையை உலகுக்குச் சொல்வோம்” என்றார்.
தங்கள் இயக்கத்தின் வேட்பாளர்களுக்காக வாக்குசேகரிப்பில் இருந்த, சேலம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் பார்த்திபனிடம் பேசியபோது, ’’சேலம் மாநகராட்சியில் 27 வார்டுகளில் போட்டியிட எங்கள் தம்பிகள் விருப்பமனு கொடுத்திருந்தார்கள். ஆனால் ஆண்ட, ஆளுகின்ற கட்சிகளை எதிர்த்து எங்களால் செலவு செய்யமுடியாது என்பதால், மாநகராட்சியை தவிர்த்துவிட்டோம்.
ஆனாலும் நகராட்சி பேரூராட்சிகளில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏனென்றால், நாங்கள் செல்லும் இடங்களில் மக்களின் வரவேற்பு அமோகமாக இருக்கிறது. பெரிய கட்சிகளை எதிர்த்து நாங்கள் களத்தில் இருப்பதே பெரிய விஷயம் என நினைக்கிறோம். மக்கள் எங்களை அன்போடு வரவேற்கிறார்கள். பணபலம் இல்லையே தவிர எங்களிடம் படைபலம் இருக்கிறது. அதனால் இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவோம்’’ என்று உற்சாகமானார்.
திருச்சி மாநகராட்சியில் 7 வார்டுகளிலும் மணப்பாறை, முசிறி நகராட்சிகளில் 8 வார்டுகளிலும் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் 3 வார்டுகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியில் இருக்கிறார்கள். கேட்டவர்களுக்கெல்லாம் சீட் கொடுக்காமல் எங்கெல்லாம் வாய்ப்பிருக்கலாம் என தெரிகிறதோ, அங்கு மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதும் விஜய் மக்கள் இயக்கத்தினரின் தேர்ந்த அரசியலாகவே தெரிகிறது.
அதேசமயம், மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே விஜய் மக்கள் இயக்கத்திலும் பூசல்கள் இருக்கவே செய்கின்றன. இதுகுறித்து நம்மிடம் பேசிய விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ராஜா, ’’எங்களைப் போன்ற அனுபவமுள்ள இயக்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்களையும் அழைத்து சமாதானப்படுத்தி இந்த தேர்தலை சந்தித்திருந்தால், இன்னும் அதிக இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கலாம். அதன்மூலம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். உதாரணத்துக்கு, நான் திருச்சி மாவட்ட தலைவராக 28 வருடம் பணிபுரிந்திருக்கிறேன். எனக்கு இயக்கத்தினர் அனைவரையும் நன்றாகத் தெரியும். அதனால் தேர்தலுக்கு யார் சரிவருவார்கள் என்பதை சுலபமாக கணித்துவிட முடியும்.
எனது அனுபவத்தைப் பயன்படுத்தி இருந்தால், திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 405 நகர்ப்புற உள்ளாட்சி இடங்களில், 200 இடங்களிலாவது வேட்பாளர்களை நிறுத்தி இருக்கலாம். அத்தனை வேட்பாளர்கள் இருக்கும்போது வாக்கு சதவீதம் அதிகரித்து திமுக அதிமுகவுக்கு அடுத்ததாக, விஜய் மக்கள் இயக்கம் அதிக வாக்குகளைப் பெற்ற இயக்கமாக மாற்றிக் காட்ட முடியும். அதைவிடுத்து, இருபதுக்கும் குறைவான இடங்களில் போட்டியிடுவதன் மூலம் பெரிதாக எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது” என்றார்.
உள்ளாட்சியில் தங்கள் ஆட்சியை நிறுவ ஆளும்கட்சியும் ஆண்டகட்சியும் கூடுதல் முஸ்தீபு காட்டுவதால், இந்தத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தால் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகளை பெறமுடியுமா என்பது சந்தேகம்தான். ஆனாலும் தங்களின் பலம், பலவீனம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு இந்தத் தேர்தல் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கும் விஜய்க்கும் இன்னொரு வாய்ப்பாக அமையும் என்பது மட்டும் நிச்சயம்.