துணை மேயருக்காக துட்டு மழை!

By கே.எஸ்.கிருத்திக்

“ஒற்றைச் செங்கல் வைத்து மதுரை எய்ம்ஸ் என்று ஏமாற்றியதைப் போல, எந்த ஒரு கட்டமைப்பையும் ஏற்படுத்தாமல் ஒரே ஒரு பலகையை மட்டும் வைத்து ‘திண்டுக்கல் மாநகராட்சி’ என்று ஏமாற்றிவிட்டது அதிமுக” என்று உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, உதயநிதி ஸ்டாலின் பேசிச் சென்றது திண்டுக்கல் மக்களை "அட.." போட வைத்திருக்கிறது.

உண்மைதான். 2014-ல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டபோது அதிமுக கையில்தான் இருந்தது திண்டுக்கல் நகராட்சி. தமிழகத்தின் 2-வது பெரிய மாநகராட்சியான மதுரையையே கண்டுகொள்ளாதவர்கள், திண்டுக்கல்லை கண்டுகொள்வார்களா? விளைவு, நிர்வாகச் சீர்கேட்டின் மொத்த உருவமாகிப் போனது திண்டுக்கல் மாநகராட்சி. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட முடியாத நிலையில் தள்ளாடுகிறது திண்டுக்கல் மாநகராட்சி.

திமுகவும் மாவட்டத்தின் முக்கிய நகரமான திண்டுக்கல்லை விட்டுவிட்டு பழனி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஏரியாவிலேயே அரசியல் செய்ததால் இயல்பாகவே திண்டுக்கல் நகர் அதிமுக கோட்டையானது. இதை உணர்ந்துதானோ என்னவோ, இம்முறை திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியை மார்க்சிஸ்ட்களுக்கு தந்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது திமுக. அதனால் திண்டுக்கல்லை அதிமுக மிக எளிதாக வென்றது. திண்டுக்கல் மாநகராட்சியையும் அதிமுகவே கைப்பற்றிவிடும் என்பதுதான் தொடக்கம் முதலே பேச்சாக இருந்தது.

இம்முறை திண்டுக்கல் மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதால், அதிமுக முன்னாள் மேயர் மருதராஜ் தன் மகள் பொன்முத்தையும் மகன் பிரேம் என்ற வீரமார்பனையும் தலா ஒரு வார்டில் இறக்கினார். அதெப்படி மாவட்டச் செயலாளரைக்கூட கேட்காமல், தனது மகளை மருதராஜ் மேயர் வேட்பாளராக அறிவிக்கலாம் என பஞ்சாயத்துக் கூட்டிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தன்பங்குக்கு தனது மகன் ராஜமோகனை நிறுத்தினார்.

எடப்பாடியிடம் பஞ்சாயத்துப் போனது. “அதிமுக வேட்பாளர்களின் செலவுகளை நான்தான் கவனிக்கிறேன். அதற்கெல்லாம் போட்டிக்கு வராத சீனிவாசன் இப்போது ஏன் வீம்பு செய்கிறார்?” என்று மருதராஜ் எகிற, கடைசியில் மேயர் வேட்பாளராக பொன்முத்தையும் துணை மேயர் வேட்பாளராக ராஜமோகனையும் அங்கீகரித்து பஞ்சாயத்து கலைக்கப்பட்டது. இருந்தாலும்கூட, “துணை மேயர் யார் என்பதையும் நான்தான் முடிவெடுப்பேன்” என்று மருதராஜ் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

மருதராஜ்

பொன்முத்து

பிரேம் என்ற வீரமார்பன்

வெங்கடேஷ்

திண்டுக்கல்லில் திமுகவை முந்துகிறது அதிமுக என்றதும், பெரும் பணக்காரரான சர்வேயர் ரத்தினம் தனது மகன் வெங்கடேஷை வார்டு கவுன்சிலருக்கு இறக்கினார். வேட்புமனு தாக்கல் தொடங்கி பணத்தை பட்டாசாகக் கொளுத்தி, சாதாரண கவுன்சிலர் தேர்தலை எம்எல்ஏ தேர்தல் ரேஞ்சுக்கு மாற்றிய ஜூனியர் ரத்தினம், வேறு சில வார்டுகளின் முக்கிய வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளைக் ‘கவனித்துக்’ கொண்டார். 48 வார்டுகளைக் கொண்ட திண்டுக்கல்லில், 25 கவுன்சிலர்களின் ஆதரவிருந்தால் துணைமேயராகிவிடலாம் என்பது தான் இந்தக் கோடீஸ்வரக் குடும்பத்தின் கணக்கு என்கிறார்கள்.

“அதெப்படி, ஒற்றை மனிதனால் இதை சாதிக்க முடியும்?” என்று கேட்டால், “நடந்தாலும் நடக்குமுங்க” என்று சொல்லும் திண்டுக்கல்வாசிகள், அதற்கான காரணங்களையும் அடுக்குகிறார்கள். “பெயர்தான் சர்வேயர் ரத்தினம். மணல் பிசினஸில் ஆறுமுகச்சாமி, படிக்காசுக்கு இணையாகச் சம்பாதித்தவர். சேகர் ரெட்டி வீட்டில் மூட்டை மூட்டையாகப் பிடிபட்ட புத்தம் புதிய 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அப்படி மாற்றிக்கொடுத்ததே ரத்தினம் தான்னும் அதுக்காகத்தான் அப்போது சிபிஐ இவரைக் கைது செஞ்சதாவும் பேச்சு உண்டு. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி என்றாலும், திண்டுக்கல்லில் 1980-ல் குடியேறி ரியல் எஸ்டேட்டில் இறங்கி, அரசுப் பணியைத் துறந்து, இன்று திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி, புதுக்கோட்டை புஷ்கரம் கல்லூரி, ரத்தினம் விலாஸ் ஹோட்டல், கிரஷர் ஆலைகள், செங்கல் சூளைகள் என்று திடீர் கோடீஸ்வரர் ஆனவர்தான் சர்வேயர் ரத்தினம். 2019-ல், ரத்தினம் தனது மகன் துரையின் திருமணத்தில் காட்டிய படோடோபத்தைப் பார்த்து திண்டுக்கல்லே திகைத்துப் போனது. அந்த அளவுக்கு செல்வாக்குள்ள ரத்தினம், தனது பணபலத்தை வைத்து எதையும் சாதிப்பார்” என்கிறார்கள் திண்டுக்கல்வாசிகள்.

திண்டுக்கல் மக்கள் சொல்வது போலவே, தனது வார்டில் ஓட்டுக்கு ரூ.2,500 வரை கொடுத்திருக்கிறார் வெங்கடேஷ். அதுமட்டுமில்லாது, இவர்களெல்லாம் ஜெயிக்கக்கூடும் என கணித்து 30 வேட்பாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கெல்லாம் கணிசமான தொகையை முன்பணமாக கொடுத்து வைத்திருக்கிறாராம். மேயர் பதவி பெண்களுக்கானதாக இருப்பதால், துணை மேயர் பதவியை கைப்பற்றினால் மேயரையும் தங்களது செல்வாக்கை வைத்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மேயர் கணக்காகவே வலம் வரலாம் என கணக்குப் போடுகிறதாம் ரத்தினம் தரப்பு.

ஐபி பிரச்சாரம்

திமுக மேயர் வேட்பாளராக கருதப்படும் இந்திராணி சப்பாத்தி சுடுகிறார்.

ஆரம்பத்தில் இந்த ஆட்டத்தைவிட்டு சற்றே ஒதுங்கி இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமி, தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு களத்தில் குதித்துவிட்டார். காரணம், எந்தெந்த ஊர்களில் எல்லாம் அதிமுக வெல்லும் என்று உளவுத் துறை தந்த ரிப்போர்ட்டைப் பார்த்து கடுப்பான முதல்வர், “திமுக தோற்கும் இடங்களில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு பதவி தப்பாது” என்று எச்சரித்தாராம். இதன்பிறகே பெரியசாமி சுறுசுறுப்பானதாகச் சொல்கிறார்கள்.

சாதாரண சர்வேயர் ரத்தினத்தை தொழிலதிபர் ஆக்கியதில் ஐ.பிக்கும் பங்குண்டு. ரத்தினத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு உதவியவர் ஐ.பி. அந்த ரூட்டில் தான் நத்தம் விசுவநாதனுடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு சேகர் ரெட்டி வரைக்கும் நூல்பிடித்து பெரிய ஆளானார் ரத்தினம். திண்டுக்கல்லில், தாங்கள் வாங்கிப் போட்டிருந்த பொறியியல் கல்லூரி ஒன்றை விலைகொடுத்து வாங்குமளவுக்கு ரத்தினம் வளர்ந்ததைப் பார்த்து, ஐபி முகாமும் அரண்டுதான் போனது.

துணை மேயர் பதவியை குறிவைத்து திமுக கவுன்சிலர்களை ரத்தினம் வளைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஐபி, ரத்தினத்துக்கு நிகராக எதற்கும் தயாராகவே இருப்பதாகச் சொல்கிறார்கள். ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய். களப்பணியாற்றும் கழகச் செயல்வீரர்களுக்கு தனி பூஸ்ட் என ஐபி கடைசி நேரத்தில் காட்டிய அதிரடிகளால் திண்டுக்கல் மாநகராட்சியை அதிமுகதான் கைப்பற்றும் என்ற பேச்சு மங்கி திமுக பக்கம் பேச்சு திரும்பியது. திமுகவின் மேயர் வேட்பாளர் யாரென்று அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்திராணி என்பவருக்கு வாய்ப்பிருக்கலாம் என்கிறார்கள்.

எப்படியோ, கோடீஸ்வர வேட்பாளரான ஜூனியர் ரத்தினம் குட்டையைக் குழப்பியதால் திண்டுக்கல் மாநகராட்சித் தேர்தலில் பண மழை கொட்டி ஓய்ந்திருக்கிறது. அடுத்ததாக மேயர், துணை மேயர் பதவிகளை குறிவைத்து பேரங்கள் பேசப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஜெயித்து வரும் கவுன்சிலர்களுக்காகவே ‘சிறப்பு’ மழையும் காத்திருக்கிறது.

இந்த கட்டுரையை வாசிக்கும் இந்தத் தருணத்தில், திண்டுக்கல் மக்கள் தங்களை யார் ஆளவேண்டும் என தீர்ப்பெழுதி முடித்திருப்பார்கள். ஆனால், திண்டுக்கல் தீர்ப்பு வழங்கப்பட்டதா வாங்கப்பட்டதா என்பதை தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து மேயர், துணை மேயர் பதவிகளுக்காக நடக்கும் மறைமுகத் தேர்தல் முடிவுகளும் தெள்ளத் தெளிவாகச் சொல்லத்தான் போகின்றன!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE