மார்த்தாண்டம்: ஓட்டல் உணவில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி - அதிகாரிகள் சோதனை 

By எல்.மோகன்

நாகர்கோவில்: மார்த்தாண்டத்தில் ஓட்டலில் வாங்கிய அசைவ உணவில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பில் உள்ள பிரபல அசைவ ஓட்டலுக்கு ஏராளமானோர் வந்து சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் மார்த்தாண்டம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், தனது மகன் ரோகித்திடம் நேற்று இரவு சாப்பாட்டுக்கு மாட்டிறைச்சி ஃபிரை வாங்கி வருமாறு கூறியுள்ளார். அவரும் அந்த ஓட்டலுக்குச் சென்று மாட்டிறைச்சி ஃபிரை வாங்கி வந்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்சலை பிரித்த போது, இறைச்சியுடன் பல்லி ஒன்று வால் துண்டாகிய நிலையில் இறந்து கிடந்துள்ளது.

மார்த்தாண்டத்தில் உள்ள அசைவ ஓட்டலில் இறைச்சியுடன் இறந்து கிடந்த பல்லி.

இதனை பார்த்து ரோகித்தும் அவரது தந்தையும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் பல்லியுடன் இருந்த இறைச்சியை காட்டி ரோகித் புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார், உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கிளாட்சன் மற்றும் பணியாளர்கள், அந்த ஓட்டலுக்குச் சென்றனர். ஓட்டலில் உள்ள இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை பரிசோதனை செய்தனர். இதில் இறைச்சி மற்றும் சில அசைவ உணவுகளை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். போலீசாரும் விசாரணை நடத்தினர்.

சமீபத்தில் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட சிலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இறைச்சியில் பல்லி கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அசைவ ஓட்டல்களில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறி வருவதால், அசைவ உணவுப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE