மதுரை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் மே 22-ல் நடந்த மோதலில் ராமர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி, அவரது மகன் ராஜேந்திரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ராமசாமியின் மற்றொரு மகன் ராம்குமாரை பெங்களூருவில் போலீஸார் கைது செய்தனர்.
அப்போது ராம்குமாருடன் மண்டபம் மறுவாழ்வு முகாம் மற்றும் ராமநாதபுரம் சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் சத்தியஷீலாவும் (42) உடன் இருந்தார். அவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சத்தியஷீலா மதுரை மாவட்டம் நெடுங்குளத்தைச் சேர்ந்தவர்.
இந்நிலையில், சத்தியஷீலா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில், 'ஸ்ரீவில்லிபுத்தூர் முத்துமாரியம்மன் கோயிலில் மே 22-ல் திருவிழா நடைபெற்றது. அப்போது அங்கு நடந்த மோதலில் ராமர் என்பவர் முன்விரோதமாக கொலை செய்யப்பட்டார்.
» கோவை: சைமா நடத்தும் டெக்ஸ்ஃபேர் சர்வதேச கண்காட்சி ஜூன் 21-ல் தொடக்கம்
» தஞ்சை - குடமுருட்டி ஆற்றில் பாலம் கட்டும் சாரம் சரிந்து ஒருவர் உயிரிழப்பு: 4 பேர் படுகாயம்
இந்த வழக்கில் போலீஸார் என்னையும் கைது செய்துள்ளனர்.கொலை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் இடம் பெறவில்லை. இருப்பினும் என்னை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் ஜாமீன் வழங்க வேண்டும்' எனக் கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பில், ''மனுதாரர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, ஜாமீன் வழங்கக்கூடாது'' எனத் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று, ''மனுதாரருக்கு தற்போதைய சூழலில் ஜாமீன் மனு வழங்க முடியாது. ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என நீதிபதி உத்தரவிட்டார்.