“இந்தியா பிறப்பெடுத்தது 1947-ல் அல்ல!” - சீக்கிய தலைவர்களுடனான சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு

By சந்தனார்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (பிப்.20) நடைபெறவிருக்கும் நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடந்த சந்திப்பில் சீக்கிய ஆளுமைகள் பலர் கலந்துகொண்டனர். பிரதமரைச் சந்தித்த சீக்கியர்கள் அவருக்கு சிரோபா எனப்படும் சால்வையை வழங்கினர். அப்போது, சீக்கிய மத குருக்களிடம் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகவும், அவர்கள் சொல்லித் தந்த பாடங்களைப் பின்பற்ற முயன்றதாகவும் மோடி கூறினார்.

அவரைச் சந்தித்த சீக்கியத் தலைவர்களில் ஒருவர், அனைவரின் மனதையும் தொட முயன்ற முதல் பிரதமர் மோடிதான் என்றும், “மோடி ஜியின் இதயம் சீக்கியரின் இதயம்” என்றும் கூறினார்.

அந்தச் சந்திப்பின்போது, பஞ்சாப் மாநிலத்தின் சிறப்புகள், தேசப் பிரிவினை, நெருக்கடி நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்களிடம் மோடி பகிர்ந்துகொண்டார்.

“இது உங்கள் இல்லம். உங்களைப் போலவே நான் இந்த இடத்துக்கு நடந்துவந்தேன். அப்படித்தான் நான் குருத்வாராவுக்கும் செல்வேன்” என்று மோடி உருகினார்.

பின்னர் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட காணொலியில், “இந்த தேசம் 1947-ல் பிறப்பெடுக்கவில்லை. நமது ஆன்மிக குருக்கள் எத்தனையோ துன்பங்களைக் கடந்திருக்கின்றனர். நெருக்கடி நிலையின்போது அடக்குமுறைகளால் நிறைய துன்பங்களை நாம் சந்தித்திருக்கிறோம். அந்தச் சமயத்தில் நான் தலைமறைவாக இருந்தேன். சீக்கியர் போல மாறுவேடம் அணிந்து நான் பதுங்கியிருந்தேன். அப்போது தலைப்பாகை அணிந்திருப்பேன்” என்று மோடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

1947-ல் நடந்த தேசப் பிரிவினையின்போது கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா இருக்கும் பகுதி பாகிஸ்தான் வசம் சென்றுவிட்டதையும் மோடி சுட்டிக்காட்டினார்.

“பஞ்சாபிலிருந்து வெறும் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்தார்பூரை இந்தியா வசம் கொண்டுவர அவர்கள் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்க முடியும். நான் ராஜதந்திர முறையில் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தேன். நான் பஞ்சாபில் தங்கியிருக்கும்போது, பைனாகுலர் மூலம் கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவைப் பார்ப்பேன். எதையாவது செய்ய வேண்டும் என்றும் நினைப்பேன்” என்றும் மோடி கூறியிருக்கிறார்.

மோடி வெளியிட்ட ட்வீட்டில், இந்தச் சந்திப்பின் பல புகைப்படங்கள் பகிரப்பட்டிருக்கின்றன.

ஆப்கானிஸ்தானிலிருந்து, சீக்கியர்களின் புனித நூலான குருகிரந்த சாஹிப் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது குறித்தும் அவர் சீக்கிய ஆளுமைகளிடம் பேசினார்.

“குரு கிரந்த சாஹிப் பெருமையுடன் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று நினைத்தோம். இதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தோம். சிறப்பு விமானத்தையும் ஏற்பாடு செய்தோம். மிகுந்த மரியாதையுடன் அதைக் கொண்டுவருமாறு நமது அமைச்சர்களிடம் நான் சொன்னேன். நமது வாழ்வில் அது மதிப்புமிக்கது. குஜராத்திலிருந்து வந்தவன் எனும் முறையில், எனக்கு உங்களுடன் ரத்த உறவு இருக்கிறது. குரு கோவிந்த் சிங்கின் ஐந்து சீடர்களில் (பஞ்ச் பியாராக்கள்) ஒருவர் குஜராத்தைச் சேர்ந்தவர்” என்றும் மோடி குறிப்பிட்டார்.

உணவு வேளையின்போது, சீக்கியத் தலைவர்களுக்கு உணவுத் தட்டுகளையும் பிரதமரே விநியோகித்தார். “இன்று நான் சேவை செய்ய விரும்புகிறேன்” என்று அப்போது அவர் சொன்னார். குருத்வாராக்களில் பெரும் பணக்கார சீக்கியர்கள் முதல் சாமானியர்கள் வரை யாராக இருந்தாலும், உணவு பரிமாறுவது உட்பட அனைத்து சேவைகளையும் செய்வார்கள். பிரதமர் மோடி சீக்கியர்களுக்கே சேவை செய்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்தத் தேர்தலில், கேப்டன் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், சுக்தேவ் சிங் திண்ட்ஸா தலைமையிலான அகாலி தளம் (சம்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது பாஜக.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE