‘தொழில் துறை 4.0' திட்டத்துக்கு ரூ.2,201 கோடி ஒதுக்கியது தமிழக அரசு!

By காமதேனு

தமிழகத்தில், 4-வது தொழில் துறை திட்டத்துக்கு 2,201 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தமிழகத்துக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் 4-வது தொழில் துறை திட்டத்துக்கு ரூ.2,201 கோடி ஒதுக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலையமும் தலா 31 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளன.

தொழிற்பயிற்சி மையங்களுக்கு தேவையான புதிய உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை அமைப்பதற்கான டெண்டரையும் அரசு வெளியிட்டிருக்கிறது.

மேலும் இந்தப் புதிய தொழில் துறை திட்டத்தின்படி, தொழில் துறை தேவைக்கு ஏற்ப தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை தயார்படுத்துதல், வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான படிப்புகளையும் அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் உள்ளூர் மற்றும் உலகளாவிய தொழில் துறையின் தேவைக்கேற்ற பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு சூழலை ஏற்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE