உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகத்தில் நடைபெறும் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், பல பாடங்களை போதிக்கப் போகிறது.
அரசியல் என்பது அதிகாரத்துடன் கூடிய மக்கள் சேவை என்ற எண்ணம் மாறி, அதுவும் முதலைப் போட்டு லாபத்துடன் எடுக்கக்கூடிய ஒரு தொழில்தான் என்பதை இந்த தேர்தல் நமக்கு காட்டுகிறது. பல ஊர்களில் தண்ணீர் தொட்டி, மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்றவற்றை அந்த ஊரில் நகர்மன்ற தலைவர்களாக இருந்தவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் கட்டிக்கொடுத்து, அவர்கள் பெயரை அந்தக் கட்டிடங்கள் தாங்கி இருப்பதை இன்றும் காணுகிறோம். கடந்த தேர்தல் வரை சேவையும் அதன் மூலம் கிடைக்கும் பெயரும் புகழும் மட்டுமே லட்சியமாக வலம் வந்த பல மக்கள் பிரதிநிதிகள், இன்றைய பணமழையை பார்த்து நடுங்கி நிர்கதியாக நிற்கிறார்கள்.
ஓட்டுக்குப் பணம் என்பது இன்றைக்கு அல்ல, சின்னங்கள் வருவதற்கு முன்னால் மஞ்சள்பெட்டி, சிகப்பு பெட்டி என்று இருந்த காலத்திலேயே ஒரு ஓட்டுக்கு நாலணா, எட்டணா என்று இருந்தது எனக் கேள்விப்பட்டுள்ளோம். பின்னாட்களில் அது ஒரு ஓட்டுக்கு பத்து ரூபாய், இருபது ரூபாய் என்றானதை நாம் அறிவோம். அடுத்து வந்த காலங்களில் இடைத்தேர்தல்களில் மட்டுமே பணம் விளையாடியதுபோய், திருமங்கலம் இடைத் தேர்தலுக்குப் பிறகு திருமங்கலம் பார்முலா என்ற ஒரு கோட்பாடு ஏற்பட்டு, ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடியாது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.
நடுத்தரவர்க்கமும் அன்றாடங்காய்ச்சிகளும் மட்டுமே பணத்தை எதிர்பார்த்த நிலை போய், இன்றைக்கு லட்சங்களில் கோடிகளில் புரளும் வாக்காளர்களும் வேட்பாளரிடம் பணம் வேண்டும் என கேட்கும் துர்பாக்கிய நிலையை, மக்களாட்சி இன்றைக்கு சந்திக்கிறது. பணம் வாங்கும் வாக்காளர்கள் சொல்லும் காரணம், வேட்பாளர்களின் கட்சித் தலைமை நமக்கு கொடுக்கச் சொல்லி கொடுத்திருக்கிறது. நாம் மறுத்து விட்டால், நம்ம காசை வேட்பாளரோ அல்லது கொடுக்க வந்த கட்சிக்காரரோ கொண்டு போய் விடுவார் என்பதே.
அதே நேரத்தில், வேண்டாம் எனச் சொல்லும் வாக்காளர்களிடம் கட்டாயப்படுத்தி பணத்தைத் தருகிற வேட்பாளர்களும் இருக்கிறார்கள். அப்படி மறுக்கும் வாக்காளர்களின் இல்லத்தில் வேட்பாளர்கள் தங்களுடைய ஆட்களை அனுப்பி பணத்தை உள்ளே போடுகிற வேடிக்கையான சம்பவங்களும் நடைபெறுகின்றன. ஓட்டுக்கு 200 ரூபாய், 300 ரூபாய் என்றிருந்த காலம் கடந்த காலம் ஆகி, இந்தத் தேர்தலில் சராசரியாக நகர்ப்புறங்களில் ஒரு வாக்குக்கு ஒருதரப்பு 500 ரூபாயும் மற்றொரு தரப்பு ஆயிரம் ரூபாயும் கொடுத்து வருவதாக செய்திகள் வருகின்றன. போட்டி கடுமையாக இருக்கக்கூடிய வார்டுகளில் ஒரு வேட்பாளர் ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றவுடன், அடுத்த வேட்பாளர் வாக்காளர்களை அணுகி 2000 ரூபாயை கொடுக்கிறார்.
அந்த 2000 ரூபாயை வாங்குகிற வாக்காளர் முதல் வேட்பாளருக்கு போனில் அழைத்து, அவர்கள் 2000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார். 2000 ரூபாய் கொடுத்திருக்கிறார் என்பதை வாக்காளர் முதல் வேட்பாளரிடம் சொல்வதற்கு காரணம், நீயும் இன்னொரு 500 ரூபாய் கொடு என்று அர்த்தம் எடுத்துக் கொள்வதா அல்லது அவர் கொடுத்து விட்டுப் போய் இருக்கிறார் என்ற செய்தியை வேட்பாளர் நலம் கருதிச் சொல்கிறாரா? எது எப்படியாயினும் ஒரு மிகப்பெரிய தவறை தொடர்ந்து இரண்டு தரப்பும் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
2000 ரூபாய் ஒரு ஓட்டுக்கு என்று கணக்கெடுத்து கொண்டால், வெற்றி பெறத் தேவையான 500 ஓட்டுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வாக்குகளுக்கும் ஒரு வேட்பாளர் கொடுக்கிறார். இதுவரை எல்லா தேர்தல்களிலும் வெற்றிபெறத் தேவையான வாக்குகளுக்கு மட்டுமே பணம் கொடுத்த நிலை போய், இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக எல்லா வாக்காளர்களுக்கும் ஒரே அளவான பணத்தை கொடுக்க வேட்பாளர் முடிவு செய்து கொடுத்து வருகிறார்கள். அதற்கு காரணம், ஒரு ஏரியாவில் பணம் கொடுத்து இன்னொரு ஏரியாவில் பணம் கொடுக்கவில்லை என்றால், அந்த வாக்காளர்கள் மத்தியில் தன்னுடைய நிலை சிக்கல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அல்லது எதிர்தரப்பு அந்த வாக்காளர்களை அணுகிவிடக்கூடாது என்பதற்காக, வேட்பாளர்கள் ஒட்டு மொத்தமாகப் பணம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
2000 ரூபாய் ஒரு வாக்காளருக்கு என்று கணக்கு வைத்துக் கொண்டால், குறைந்தபட்சம் ஆயிரம் வாக்குகளுக்கு ஒரு வேட்பாளர் பணம் கொடுத்தால் ஓட்டுக்கான பணம் மட்டும் இருபது லட்ச ரூபாய் ஒரு வார்டில் செலவாகிறது. மற்ற செலவுகளையும் சேர்த்தால் 30 லட்ச ரூபாயை, ஒரு வேட்பாளர் வார்டு அளவிலே கவுன்சிலராக வெற்றிபெற செலவு செய்கிறார் என்றால், சராசரியாக 30 வார்டுகள் கொண்ட ஒரு நகராட்சியில் மொத்த செலவை நீங்கள் கணக்கில் கொள்ளுங்கள். இவ்வளவு செலவையும் ஒரு நகர்மன்ற தலைவர் எடுக்க முடியுமா? எதற்காக எந்த தைரியத்தில் இப்படி செய்கிறார்கள்?
ஒரு கவுன்சிலர் வேட்பாளர் எந்த நம்பிக்கையில் செய்கிறார் என்றால், வெற்றி பெற்றபிறகு சேர்மன், துணை சேர்மன் தேர்தல்களில் அந்த வேட்பாளரிடம் நான் இவ்வளவு ரூபாய் செலவு செய்து இருக்கிறேன், இதை எனக்கு நீங்கள் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அந்தப் பணத்தை வாங்க முடியும் என்ற சிந்தனையிலேயே, தைரியத்திலேயே இவ்வளவு செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் வாக்குகள் சேகரிக்கவும், வாக்குகளை சரிபார்க்கவும், துண்டுப் பிரசுரங்களைக் கொடுக்க மட்டுமே கட்சியினுடைய கிளை அமைப்புகளும் முகவர்களும் செயல்பட்டு வந்தனர். ஆனால் இன்றைக்கு அந்த முகவர்கள் எல்லாம் பணத்தைக் கொண்டு போய் வாக்காளர்களிடம் சேர்க்கின்ற பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்பதே, வேட்பாளர்களின் எண்ணமாய் மாறிப் போயிருக்கிறது. அரசியல் கட்சிகள் மட்டுமே பணம் கொடுத்த நிலை போய், இந்தத் தேர்தலில் சுயேச்சைகளும் மிகப் பெருமளவில் பணங்களை வாக்காளர்கள் மத்தியில் சேர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இன்னொரு செய்தியையும் இந்த நேரத்திலே நான் குறிப்பிட வேண்டும். அகில இந்திய அளவில் சில கார்ப்பரேட் கம்பெனிகள் தான், தமக்கு நெருக்கமான கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். அதற்கு செலவழிப்பார்கள். அவர்கள் ஆளுகிற கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் பணம் கொடுப்பார்கள். அதேபோல உள்ளூரில் பெரும் அளவில் வர்த்தகம் செய்யும் சில நிறுவனங்களும், இந்த தேர்தலில் வார்டு வாரியாக தன்னுடைய வேட்பாளர் என்ற முத்திரை குத்தி பலருக்கும் பணம் கொடுத்து வருகிறார்கள்.
யார் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறதோ அந்த வேட்பாளர்களுக்கு அவர்கள் முன்னதாகவே பணம் செலவழிக்க தொடங்கியிருக்கிறார்கள். இன்னொரு விஷயமும் இந்த தேர்தலில் நடக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தன்னுடைய நகர்மன்ற தலைவர் வேட்பாளர் அல்லது துணைத் தலைவர் வேட்பாளர் என ஒருவரை முடிவு செய்து வைத்திருக்கிறார்களோ, அவர்களை தோற்கடிக்க அவர்களுடைய அரசியல் போட்டியாளர்கள் தன்னுடைய வார்டுகளில் வேலை செய்வதைவிட அந்த சேர்மன் வேட்பாளர் யாரோ அவருடைய வார்டிலும் புகுந்து கவிழ்ப்பு வேலையை கனகச்சிதமாக செய்து வருகிறார்கள். அது எல்லா கட்சிகளிலும் எல்லா ஊர்களிலும் ஏறக்குறைய நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தேர்தலில் தலைவர் வேட்பாளர்களுக்கு ஒரு பக்கம் கத்தி அல்ல அரசியல் களத்திலே பல பக்கம் தொங்கிக் கொண்டிருக்கிற கத்திகளை அவர்கள் கடந்து வரவேண்டும் என்று புரிய வருகிறது. இவற்றையெல்லாம் பார்க்கிறபோது மறைமுக தேர்தலை காட்டிலும் நேரடித் தேர்தல் என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என கருத வேண்டியிருக்கிறது. மறைமுகத் தேர்தல் என்கிறபோது அடிமட்ட அளவிலேயே இவ்வளவு பெரிய தவறு நடைபெற்றால் உள்ளாட்சிகளின் நடவடிக்கைகள் மிகப்பெரிய கேள்விக்குறியாகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஒரு காலத்தில் வாக்குக்கு பணம் கொடுக்கிறபோது பத்திரிக்கைகளுக்கு பயந்தார்கள். போலீஸுக்கு பயந்தார்கள். நீதிமன்றம் கண்டிக்கும் என்று பயந்தார்கள்.
ஆக ஜனநாயகத்தின் எந்த தூணுக்கும் இன்றைய அரசியல் களம் பயம் அற்றுப் போன ஒரு சூழ்நிலையை இன்றைக்கு நாம் பார்க்க முடிகிறது. தவறு வாக்காளர்கள் பக்கம் என்றாலும் இன்னொரு பக்கம் வேட்பாளர்களும் தவறு செய்கிறார்கள். இவ்வளவு பெரிய செலவையும் எப்படி ஒருவர் எடுக்கப் போகிறார்? அப்படி எடுக்க முடியாவிட்டால் எதற்காக இவ்வளவு பெரிய செலவை ஒருவர் செய்ய வேண்டும்? ஒரு நண்பர் குறிப்பிடுவதைப் போல ஒட்டுமொத்தமாக நகராட்சியை ஏலம் விட்டால்கூட இவர்கள் செலவு செய்த தொகையை எடுக்க முடியாது. இன்றைய இளைய சமுதாயம் நியாயத்தின் பக்கம் நேர்மையின் பக்கம் இருக்க விரும்புகிறது. சில கல்லூரிகளில் இந்திய இறையாண்மை குறித்து நான் பேசச் சென்ற போது பெரும்பகுதியான மாணவர்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவது என்பது தவறு என்று சொன்னார்கள். ஆனால் சில மாணவர்கள் நம்முடைய காசை தானே நமக்கு கொடுக்கிறார்கள், நாம் ஏன் வாங்காமல் அதனை மறுக்க வேண்டும் என்று எதிர்கேள்வி கேட்டவர்களும் இருக்கிறார்கள். ஆக இது ஒரு மிகப்பெரிய தவறான முன்னுதாரணமாக மாறிப் போயிருக்கிறது.
இன்றைக்கு அரசியல் களம் சென்று கொண்டிருக்கிற பாதையை செப்பனிட தேர்தல் கமிஷனால் முடியும். சாட்டையை எடுத்து சுழற்ற வேண்டிய தேர்தல் கமிஷன் என்ன செய்யப் போகிறது? எல்லாவிதமான தேவையற்ற செலவுகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தேர்தல் கமிஷன் இப்போது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தி இருக்கக்கூடிய வாக்குக்கு பணம் என்ற முறையை எப்படி முடிவுக்குக் கொண்டு வரப்போகிறது? பணமழையிலிருந்து மக்களாட்சி காப்பாற்றப்படுமா?