ஆளும் திமுக அரசு அலங்கோல நிலைக்கு தமிழகத்தை தள்ளிவிட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு

By KU BUREAU

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை9 பேர் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அறிந்து மிகுந்த அதிர்ச்சியுற்றேன். கடந்த சில மாதங்களாகவே அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், 4 மாத கர்ப்பமான பின்னரே இந்த விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது.

காவல் துறை விசாரணையில், இந்த கொடூரச் செயலை செய்தகும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோல பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.

திமுக ஆட்சியில் சிறுவர்கள், இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி, குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. தற்போது காவல் துறை மீது அச்சமின்றி குற்றச் செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபடுகின்றனர். திமுக ஆட்சி தமிழகத்தை அலங்கோல நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தும்,அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காக பல்வேறு அவதூறுகளைப் பரப்பினார். ஆனால், தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்த எவ்விதநடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு தந்தை என்ற அக்கறையுடன் திமுகவைக் கண்டிக்கிறேன். உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போதை பொருள்: பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தற்போது, போதைப் பொருட்களை கடத்துபவர்கள், எவ்விதஅச்சமுமின்றி தமிழ்நாட்டை போதைப் பொருள் மையமாகவும் புகலிடமாகவும் மாற்றி வருகன்றனர். இதற்காக திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இனியாவது போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடன் துரிதமாக செயல்படுமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE