ரோமானியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கோவையில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதால், அவருக்கு குடியுரிமை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
ரோமானியா நாட்டைச் சேர்ந்த நெகொய்டா ஸ்டீஃபன் மாரியஸ், தொழில் நிமித்தமாக கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியா வந்த அவர் கோவையில் தங்கினார்.
கோவையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ரோமானியர் நெகொய்டா கழுத்தில் திமுக கட்சி துண்டை அணிந்தவாறு புல்லட்டில் உதய சூரியன் சின்னத்துடன் வீதி வீதியாக திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். பேருந்தில் பயணம் செய்து பொதுமக்களுக்கு திமுக ஆதரவாக துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் ரோமானியா நாட்டைச் சேர்ந்த நெகொய்டா ஸ்டீஃபன் மாரியஸுக்கு, குடியுரிமை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதில், வந்த நோக்கத்தை மீறி தேர்தல் விவகாரங்களில் ஈடுபடுவது (கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம், துண்டு பிரசுரம் வழங்கியது) விசா விதிமீறல்களுக்கு உட்பட்டவை என்பதால், உரிய ஆவணங்களுடன் குடியுரிமை அலுவலகத்தில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்குகாறு குறிப்பிடப்பட்டுள்ளது. விளக்கமளிக்கத் தவறும்பட்சத்தில் பிரிவு 14 வெளிநாட்டவருக்கான சட்டப்படி, நெகொய்டா ஸ்டீஃபன் மாரியஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.