நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளதால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பைத் தடுக்க திமுகவினர் முயல்வதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு கேட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுகவினர் தமிழகம் முழுதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கி வருவதாகவும், அவர்களை கையும்களவுமாகப் பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதாக கூறிய ஜெயக்குமார், தேர்தல் பறக்கும் படை ‘பதுங்கும் படை’யாகச் செயல்பட்டு வருகிறது.
தேர்தலின்போது வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கலவரத்தை உண்டாக்க, திமுகவினர் ரவுடிகளை களம் இறக்கியுள்ளதால், அதை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்.
தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ள பதட்டமான மற்றும் மிக பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் போட்டு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அந்தந்த பூத்துக்கான ஏஜென்ட்டை, அவரது அடையாள அட்டையை ஆய்வுசெய்த பின்னரே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க வேண்டும்.
ஏனென்றால், கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில், சென்னையில் 89 இடங்களில் மறு தேர்தல் நடத்தப்பட்டது குறித்து உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்தது. அந்த நிலைமை இந்த முறை ஏற்படக் கூடாது. துணை ராணுவத்தினரை பாதுகாப்புக்காக தேர்தல் ஆணையம் கொண்டுவர வேண்டும்.
உதயநிதி ஸ்டாலின் பரப்புரையின்போது தனது மாண்பை மீறி, ‘முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு இனி சாவுமணி’ என தகாத வார்த்தையால் பேசுவதால், அவர் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிமுக ஓட்டு ஒருபோதும் மற்றவர்களுக்கு விழாது.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பை காவல் துறை வெளியிட்டு, கொடி அணி வகுப்பு நடத்துவதை அதிகரிக்க வேண்டும். பூத் சிலிப்பை திமுகவினர் வழங்கக் கூடாது, மாநகராட்சி ஊழியர்கள்தான் வழங்க வேண்டும். அதற்கு மாறாக நடந்தால், அதிமுகவினர் அதை ஆதாரத்துடன் உயர் நீதிமன்றத்துக்கு தருவோம்” என்று கூறினார்.