`தாமரைக்கு வாக்களிக்காவிட்டால் பாவம் வரும்'- பிரச்சாரத்தில் ஹெச்.ராஜா சாபம்

By காமதேனு

``தடுப்பூசி மூலம் நம்மை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. தாமரைக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்காவது வாக்களித்தீர்கள் என்றால் மகா பாவம்" என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சாபமிட்டார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "இந்துக்களுக்கு எதிரான அரசாக திமுக அரசு செயல்படுகிறது. தமிழக அரசின் நிர்வாகம் முழுவதும் மதமாற்றம் நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்துக் கோயில்கள் அனைத்தும் இடிக்கப்படுகிறது.

இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள். வெறும் இரண்டரை சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளீர்கள் தூக்கி எறிய வெகு நாள் ஆகாது. குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்பது மக்களை ஏமாற்றும் செயல் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஊழலும் திமுகவும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் அதிலிருந்து அவர்களை பிரிக்க முடியாது. 1,500 கோடியில் 500 கோடி ரூபாய் கொள்ளையடித்து உள்ளார்கள். 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாத காரணத்தினால் தற்பொழுது ஆட்சிக்கு வந்தவுடன் கொள்ளையடித்து வருகிறார்கள்.

தடுப்பூசி மூலம் நம்மை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. அவருக்கு நன்றி தெரிவிக்க தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். தாமரைக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்காவது வாக்களித்தீர்கள் என்றால் மகா பாவம் என நான் சொல்லவில்லை திருவள்ளுவர் சொல்லி உள்ளார்" என கூறி 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு' என திருக்குறளை சொல்லி வாக்கு சேகரித்தார் ஹெச்.ராஜா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE