விழுப்புரம் நகராட்சியில் 2 வார்டுகளில் தந்தையை எதிர்த்து மகனும், மகனை எதிர்த்து தந்தையும் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விழுப்புரம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் வளவனூர், அனந்தபுரம், செஞ்சி, மரக்காணம், அரகண்டநல்லூர், விக்கிரவாண்டி, திருவெண்ணைநல்லூர் ஆகிய 7 பேரூராட்சிகளில் 210 கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 945 வேட்பாளர்கள் கலத்தில் உள்ளனர்.
விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 204 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக 20 இடங்களில் போட்டியிடுகிறது. 27வது வார்டில் பாஜக மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் ராயர் தாமரை சின்னத்திலும், இவரது மகன் விக்னேஷ் சுயேட்சையாக கிட்டார் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இதேபோல 41வது வார்டில் ராயர் மகன் விக்னேஷ் தாமரை சின்னத்திலும், ராயர் சுயேட்சையாக கிட்டார் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். அதே நேரம் இந்த வார்டுகளில் அதிமுக வேட்பாளர்களும், திமுக கூட்டணிக்கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இது குறித்து பாஜக வேட்பாளர் ராயரிடம் கேட்டபோது, நானும், என் மகன் விக்னேஷும் மாற்று வேட்பாளர்களாக மனுத் தாக்கல் செய்தோம். பின்னர் கடந்த 4ம் தேதியே இருவரும் டெல்லி சென்றுவிட்டோம். 7ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெறும் நாளுக்குள் வந்துவிடலாம் என திட்டமிட்டோம். ஆனால் வரமுடியாத சூழல் ஏற்பட்டதால், 6ம் தேதியே விழுப்புரம் ஆட்சியர் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கும் மின்னஞ்சல் மூலம் மாற்று வேட்பாளருக்கான வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அனுப்பினோம்.
மேலும் 7ம் தேதி விழுப்புரம் நகராட்சியில் பாஜக நிர்வாகிகள் ஜெயசங்கர், சுகுமாறன் ஆகியோர் நேரிலும் வாபஸ் மனுவை அளித்தனர். அப்போது அங்கிருந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பாளர் நேரில் வரவேண்டும் என வாபஸ் மனுவை பெற மறுத்து, இறுதிபட்டியலை வெளியிட்டுள்ளனர். மேலும் சுயேட்சையாக போட்டியிடும் எனக்கும், என் மகனுக்கும் கிட்டார் சின்னத்தை ஒதுக்கியதில் ஏதோ உள் நோக்கம் உள்ளதாகவும், எங்கள் வெற்றியை தடுக்க திமுக முயற்சி செய்கிறது. அதனால்தான் எங்கள் வார்டுகளில் திமுக நேரடியாக போட்டியிடவில்லை" என்றார்.