நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இறுதிக்கட்ட பரப்புரை நாளான இன்று, பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார் திமுகவின் பெண் வேட்பாளர் ஒருவர்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டில், நேரு நகரைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி அனுசியா ( 56) என்பவர் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். கடந்த 2 வாரமாக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைவதால், அனுசியா இன்று காலையிலிருந்தே தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வீடு வீடாக நடந்து சென்று ஆதரவாளர்களுடன் வாக்குசேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவர் ஒருவரை வரவழைத்து பரிசோதித்ததில், அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அனுசியா உடல் அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வேட்பாளர் மரணமடைந்தது, அப்பகுதி திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.