‘பச்சைப் பொய்’ ஈபிஎஸ்; ‘பக்கவாத்தியம்’ ஓபிஎஸ்

By காமதேனு

"என்னதான் ‘பச்சைப் பொய்’ பழனிசாமியும், ‘பக்கவாத்தியம்’ ஓ.பன்னீர்செல்வமும் ஊர் ஊராகச் சென்று, தங்களுடைய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "திருவள்ளூர் மாவட்டமானது பழமையான மாவட்டமாக இருந்தாலும், அதை நவீன மாவட்டமாக மாற்றியது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்! திருப்பெரும்புதூரிலும், இருங்காட்டுக் கோட்டையிலும், கும்மிடிப்பூண்டியிலும் உருவாக்கப்பட்ட தொழில் வளாகங்கள், அம்பத்தூர், மணலி, திருவள்ளூரைச் சுற்றிலும் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள், இதில் எல்லாம் பெரும்பாலானவை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதுதான். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உருவாக்கத்தான் தெரியும்! ஆனால், அ.தி.மு.க.விற்கு அழிக்கத்தான் தெரியும்!

சமச்சீர்க் கல்வி, மெட்ரோ ரயில் திட்டம், மதுரவாயல்- சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம், சேது சமுத்திரத் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் என்று அ.தி.மு.க. ஆட்சி முடக்கிய திட்டங்களை ஏராளமாகச் சொல்ல முடியும். இவ்வாறு முடக்கி வைத்து மாநில தொழில் வளர்ச்சியை கெடுத்தவர்களை, இன்றைக்கு மக்களே முடக்கி வைத்துவிட்டார்கள்! அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் தேங்கி நிர்வாகச் சீர்கேட்டால் தத்தளித்தது! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழ்நாடு முன்னேறியது! அனைத்துத் துறைகளிலும் இன்று முன்னேறிக்கொண்டே இருக்கிறது! அதனால்தான் ‘தமிழ்நாட்டின் நம்பிக்கை நாயகனாக’ திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் இருக்கிறது!

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் தி.மு.க. ஒன்றை சொன்னால், அதை நிச்சயம் செய்யும்!என்னதான் ‘பச்சைப் பொய்’ பழனிசாமியும் - ‘பக்கவாத்தியம்’ ஓ.பன்னீர்செல்வமும் ஊர் ஊராகச் சென்று, தங்களுடைய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்! ஏன் என்றால், இந்த அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அதனுடைய பயனை அனுபவிப்பவர்கள் அனைத்து இல்லங்களிலும் இருக்கிறார்கள்! ஏன், அ.தி.மு.க. தொண்டர்களும் பயன்பெறுகிறார்கள்! இதை அனைத்தும், அ.தி.மு.க. அரசு நிதிநிலையை சீரழித்த நிலையிலும் சாதித்திருக்கிறோம்!

சீரழிப்பது மட்டும்தான் ‘பழனிசாமி - பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனிக்குத்’ தெரியும். அவர்கள் நிதிநிலைமையை எவ்வாறு சீரழித்தார்கள் என்று சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டு அரசிற்கு இப்போது ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் கடன். இதுதான் அ.தி.மு.க. விட்டுவிட்டுப் சென்ற நிதிநிலைமை. 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது, தமிழ்நாட்டினுடைய கடன், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்தான் இருந்தது. அதிலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த கடனுடைய தொடர்ச்சிதான். ஆனால், கடந்த பத்தாண்டுகாலத்தில் மட்டும், ஐந்தரை லட்சம் கோடி ரூபாயாக கடனை உயர்த்தி, தமிழ்நாட்டை கடனாளி மாநிலம் ஆக்கியது அ.தி.மு.க.தான்!

மக்களைப் பார்க்க வேண்டும், மக்களோடு நாமும் இருக்க வேண்டும், அவங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது என்றால், அதற்குக் காரணம் கலைஞர் ஊட்டிய உணர்வு! அவர் உருவாக்கிய மனிதாபிமானம்! மக்கள் பற்று! அதனால்தான் எந்த மாவட்டத்தில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் உடனே சென்று மக்களைப் பார்க்க வேண்டும் என்று நான் புறப்பட்டுப் செல்கிறேன். நம்மை உருவாக்கிய தலைவர்கள் அப்படித்தான் நடந்து காட்டியிருக்கிறார். இது நம்முடைய ரத்தத்துலேயே ஊறியது! ஏதோ அரசியலுக்காக இல்லை, நம்முடைய இயல்பே இதுதான். எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியாக இருந்தாலும்- மக்களோடு மக்களாக நாம் இருப்போம்!

ஓ.பன்னீர்செல்வம்

பழனிசாமி ஆட்சிக்காலத்தில், கொரோனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, நடுத்தர மக்களுக்காக, ‘ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தைத் தொடங்கி, அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கழக நிர்வாகிகளான நீங்கள் வழங்கினீர்கள். அரிசி, பருப்பு ஆகிய உணவுப் பொருட்களைக் கொடுத்தோம்! உணவாகவும் சமைத்து கொடுத்தோம்! பல ஊர்களில் நிதி உதவியும் செய்யப்பட்டது. மருந்துகளை வாங்கிக் கொடுத்தோம். கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை விதைத்தோம். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டோம்’. அந்தக் கொரோனா காலத்திலும் மக்களைக் காத்தோம். நடப்பது யாருடைய ஆட்சி என்றெல்லாம் பார்க்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் நம் சகோதரர்களாக நினைத்து செயல்படுகிறவன் நான். அவ்வாறு நினைக்கக் கூடியவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தொண்டரும்!

தங்களது சொந்தப் பணத்தைச் செலவு செய்து 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தில் உணவுப் பொருட்களைக் கழகத் தொண்டர்கள் வழங்கினார்கள். கருணை உள்ளம் கொண்ட உடன்பிறப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் என்பதுதான், எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பது! விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம். இந்த ஸ்டாலின் ஒன்று சொன்னால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான்! உள்ளாட்சி அமைப்புகளிலும் மகத்தான வெற்றியை மக்களாகிய நீங்கள் கொடுங்கள். உங்கள் ஊரில், உங்களோடு இருந்து பணியாற்றக் காத்திருக்கிறோம்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE