’ஷோலே’ கப்பர்சிங்: உ.பி தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய சம்பல் கொள்ளையன்!

By ஆர். ஷபிமுன்னா

உத்திரப்பிரதேசம் சம்பல் கொள்ளையனின் கதையில் உருவான ’ஷோலே’ திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் வில்லன் கப்பர்சிங்கும் முக்கிய காரணம். கொள்ளைச் சம்பவங்கள் மட்டுமல்ல, தேர்தல்களிலும் கப்பர்சிங் ஆக்கிரமித்திருந்தது, இன்றும் இங்கே திகிலுடன் நினைவுகூரப்படுகிறது.

கோபால்தாஸ் சிப்பி தயாரிப்பில், மகன் ரமேஷ் சிப்பி இயக்கத்தில் 1975-இல் வெளியான திரைப்படம் ஷோலே! அதில் நடித்த தர்மேந்திரா, அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரின் திரைவாழ்வில் இந்த திரைப்படம் திருப்புமுனையானது. இவர்கள் மட்டுமல்ல, கப்பர்சிங்காக நடித்த அம்ஜத்கான் வாழ்விலும் இந்த படமே திருப்புமுனையானது. அதுவரை துக்கடா பாத்திரங்களில் நடித்து வந்த அம்ஜத்கான், கப்பர்சிங் பாத்திரம் மூலமாக முதல்முறையாக வில்லனாக மிரட்டினார்.

’கித்னே ஆத்மி தே?...’ எனத் தொடங்கி, ஆரம்பக் காட்சியில் கப்பர்சிங் பேசும் இந்தி வசனம், அப்போது என்னைப் போல் தமிழக சிறுவர்கள் பலரது உதடுகளிலும் சரளமானது. ஷோலே படத்தின் ஒரு காட்சியில் அழும் குழந்தையிடம், ‘கண்ணே உறங்கி விடு, இல்லைவெனில் கப்பர்சிங் வந்து விடுவான்’ என பயமுறுத்தி தூங்க வைப்பார்கள்.

இப்படி, பயங்கர வில்லனாகச் சித்தரிக்கப்பட்ட கப்பர்சிங், நிஜ வாழ்க்கையிலும் அவ்வாறே இருந்துள்ளார். இவர், உபி, மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பரவியுள்ள புந்தேல்கண்டின் சம்பல் கொள்ளையராக வாழ்ந்திருகிறார். கப்பர்சிங்கின் பூர்வாசிரம் பெயர் பிரீதம் சிங். இவர்தான் பிரீதம் சிங் என்கிற கப்பர் சிங் என்பது, அப்பகுதியில் வாழ்ந்த பலர் அறியாதது. 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இறந்த பிறகே, நிஜப் பின்னணி வெளியுலகுக்கு தெரிய வந்தது.

இந்த கப்பர்சிங் மீது 1974ஆம் வருடம் வரை லலீத்பூர் காவல்நிலையத்தில் ஏராள வழக்குகள் பதிவாகி இருந்தன. ஷோலேவில் வரும் காட்சியைப் போல் உண்மையான கப்பர்சிங்கிடமும், தன்னை எதிர்ப்பவர்களின் மூக்கு காதுகளை நறுக்கும் வழக்கம் இருந்தது.

'ஷோலே’ கப்பர்சிங்காக அம்ஜத்கான்

ஷோலே திரைப்படத்தில் காவல்துறை ஆய்வாளராக வரும் சஞ்சீவ்குமாரால் கைது செய்யப்படும் கப்பர்சிங், சிறையிலிருந்து தப்பிவந்து ஆய்வாளரின் கைகளை வெட்டுவார். இந்த அளவிற்கு கொடூரமாக, உண்மை வாழ்விலும் கப்பர்சிங் இருந்துள்ளார். ஆனால், ஷோலேவின் கப்பர்சிங், கர்நாடகாவிலுள்ள ராம்கரில் வாழ்வது போல் காட்டப்பட்டது. உண்மையில் கப்பர்சிங், உபியிலுள்ள புந்தேல்கண்டின், லலித்பூர் மாவட்டம் தால்மேட் தாலுகாவின் கிராமம் ஒன்றில் வாழ்ந்துள்ளார்.

லலித்பூரை சுற்றியுள்ள உபியின் ஜலோன், ஜான்சி, கால்பி மற்றும் மபியின் சாகர், டீக்கம்கர், பண்ணா என புந்தேல்கண்டின் பல மாவட்ட கிராமவாசிகள் மத்தியில் கப்பர்சிங் என்றாலே திகில்தான். தனது ராம்பூர் கிராமத்தின் உயர்குடி சமூகத்தின் கொடுமை தாங்காது, துப்பாக்கிகள் ஏந்திய ஒரு கும்பல் 1969இல் சம்பல் கொள்ளையராக மாறியது. இக்கும்பலின் தலைவனாக உயர்ந்தார் கப்பர்சிங். இவர் பஞ்சாயத்து முதல் மக்களவை தேர்தல் வரையிலும் அரசியல்வாதிகளுக்கு வாக்குகளை பெற்றுத் தருபவராகவும் இருந்துள்ளார்.

இது குறித்து, லலித்பூரின் ராம்பூர் கிராமத்தில் வாழும் கப்பர்சிங்கின் மகன் பவானிசிங், ‘காமதேனு’ இணையத்திடம் கூறும்போது, ‘இங்கு எம்எல்ஏவாக இருந்த சுதாமா பிரசாத் கோஸ்வாமி என்பவர்தான், பிரீதம் சிங் என்கிற எனது தந்தையின் பெயரை கப்பர்சிங் என மாற்றினாராம். அப்போது முதல் என் தந்தையை தேர்தலில் வாக்குகள் பெறவும் அரசியல்வாதிகள் பயன்படுத்தி இருந்தனர். இதற்கு அவர் இப்பகுதியினருக்கு அச்சம் தருபவராக வாழ்ந்ததே காரணம். கப்பர்சிங்கின் மகன் என்பதால் என்னிடமும் சற்று அச்சத்துடனே பழகுவார்கள்.

பிரீதம் சிங் (எ) கப்பர்சிங்

ஷோலேவில் காட்டுவதுபோல் என் தந்தை எந்த ஒரு கிராமத்தினரையும் மிரட்டியதில்லை. அப்படத்தில் வரும் நாயகி ஹேமாமாலினியை சித்தரவதைக்குள்ளாகுவது போன்றும் செய்ததில்லை. இதுபோல் என் தந்தையை தவறாகச் சித்தரித்ததற்கு எதிராக நாங்கள் சிப்பி குடும்பத்தினர் மீது வழக்கு தொடுத்தோம். ஆனால் போதிய வசதி இல்லை என்பதால் அந்த வழக்குகளை தொடர்ந்து நடத்திச் செல்ல முடியவில்லை. ஷோலேவின் கப்பர்சிங் என்பதை ’முழுக்கவும் ஒரு கற்பனை பாத்திரம் மட்டுமே’ என நீதியின் முன்பாக சாதித்துவிட்டார்கள்’ என்றார்.

சம்பலில் இன்னொரு பிரபல கொள்ளையரான பூலன்தேவியை தொடர்ந்து பலரும் உபி, மபி மாநில அரசுகளிடன் சரணடைந்தனர். இந்த வகையில், கப்பர்சிங்கும் 1986இல் மபி மாநில காங்கிரஸ் முதல்வரான மோதிலால் வோராவின் முன் சரணடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சில காலம் சிறைவாசம் இருந்து விடுதலையானவர், கொள்ளை நடவடிக்கைகள் பக்கம் போகாது விவசாயம் செய்து பிழைத்துள்ளார். அவருக்கு மபி அரசு அளித்த நிலத்தில் தற்போது கப்பர்சிங்கின் குடும்பத்தினர் விவசாயம் செய்து பிழைக்கின்றனர்.

உபி தேர்தல்களில் கப்பர்சிங் உதவியால் வென்றவர்களில் பலர், பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்களாக இருப்பதாக சொல்கிறார்கள். கப்பர்சிங் இறந்த பின்னரும், அந்த அரசியல்வாதிகளின் பெயர்களைக் குறிப்பிட புந்தேல்கண்ட்வாசிகள் தயங்குகின்றனர். அக்காலத் தேர்தல்களில் கப்பர்சிங் உத்தரவிற்கு பணிந்து கிராமவாசிகள் வாக்களித்ததே இதற்கு காரணமானதாகவும் தெரிகிறது.

எனினும், காலத்தின் மாற்றம் சம்பல் கொள்ளையர்களையும் விடவில்லை. அவர்களும் சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். இவர்களில் பிரபலமான கொள்ளையர்கள் சிலரின் உண்மைக் கதைகள் தொடர்பான சர்ச்சைகளும் அப்பகுதி மக்களிடையே இன்றுவரை நீடிக்கின்றன. மேலும் பல கொள்ளையர்களின் உண்மைக் கதைகள் பாலிவுட்டின் திரைப்படங்களாகவும் வெளியாகி உள்ளன.

தற்போது உபியின் ஏழுகட்டங்களாக நடைபெற்று வரும் தேர்தலில், கொள்ளையர்களின் ஆதிக்கம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதற்கு காவல்துறையினரின் கெடுபிடி நடவடிக்கைகளும் காரணமாகும். ஆனால் கொள்ளையர்கள் உருவாகக் காரணமான உயர்குடிகளின் கொடுமைகள், புந்தேல்கண்டின் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இன்னும் தொடர்ந்தே வருகிறது.

தேர்தல் கோதாவில் ‘உ.பி வீரப்பன்’ தத்துவாவின் வாரிசு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE