மிரட்டும் தொனியில் பேசிய சி.வி.சண்முகம் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்!

By ரஜினி

வீரத்தமிழர் பேரவையின் தலைவர் தங்க.பாஸ்கரன் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க.பாஸ்கரன், “விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழக முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழக காவல் துறை குறித்து தகாத வார்த்தையில் மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். முன்னாள் அமைச்சராகப் பதவி வகித்த சி.வி. சண்முகம் தனது மாண்புகளை மீறி பொதுவெளியில் தகாத வார்த்தையில் பேசிவருவது கண்டிக்கத்தக்கது.

வாக்குசேகரிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துக்காக சி.வி. சண்முகம் இவ்வாறு பேசியிருக்கிறார். அவருக்கு வழங்கியுள்ள பாதுகாப்பை உடனடியாக ரத்துசெய்து, அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

சி.வி. சண்முகம் மீது, விழுப்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அவருக்கு எதிராகப் பலர் புகாரளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE