ஏய் காவல்துறையே..!- ஒருமையில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

By காமதேனு

காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, கூட்டத்தில் ஒருவர் பிரச்சாரத்தை நிறுத்தும்படி சொல்லியதால் அவரை ஒருமையில் பேசியதுடன் காவல்துறை தற்போது ஏவல்துறையாக உள்ளது என்று சாடினார். மேலும் அவர், "ஏய் காவல்துறையே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். ரவுடிகளை வைத்து என்னை மிரட்டப் பார்க்கிறீயா" என்று ஒருமையில் பேசினார்.

இதையடுத்து சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சி.வி.சண்முகம் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE