காங்கிரஸிலிருந்து அஷ்வனி குமார் விலகியது துரதிர்ஷ்டவசமானது: மணீஷ் திவாரி

By காமதேனு

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அஷ்வனி குமார், அக்கட்சியிலிருந்து நேற்று விலகினார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சட்டத் துறை அமைச்சராக இருந்த அவருக்குக் கடந்த சில ஆண்டுகளாகக் கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்பட்டவில்லை.

அஷ்வனி குமார்

தனது விலகல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியிருந்த கடிதத்தில், “46 ஆண்டுகளாகக் கொண்டிருந்த நீண்டகால உறவுக்குப் பின்னர், கட்சியிலிருந்து விலகுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். கட்சியிலிருந்து விலகுவது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அஷ்வனி குமார், கள யதார்த்தத்திலிருந்து காங்கிரஸ் விலகியிருப்பதாகவும், தேசிய மனநிலையை அக்கட்சி எதிரொலிக்கவில்லை என்றும் விமர்சித்தார். ஊக்கம் தரும் வகையிலான தலைமை காங்கிரஸில் இல்லை என்றும், உட்கட்சி செயல்பாடுகளைப் பலவீனப்படுத்தும் போக்கு கட்சியில் நிலவுவதாகவும் குற்றம்சாட்டினார். பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் அவமதிக்கப்பட்டதாகவும், காங்கிரஸிலிருந்து வெளியேறும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டதாகவும் அஷ்வனி குமார் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கட்சியிலிருந்து அஷ்வனி குமார் விலகியது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மணீஷ் திவாரி, “கட்சியிலிருந்து ஒரு தலைவர் விலகும்போது காங்கிரஸ் இழப்பைச் சந்திக்கிறது. அஷ்வனி குமார், பஞ்சாபிலிருந்து எங்கள் (கட்சியின்) நாடாளுமன்றவாதியாக இருந்தவர். மதிப்புக்குரிய மத்திய அமைச்சராகவும் திகழ்ந்தவர். துரதிருஷ்டவசமாக அவர் விலகிவிட்டார்” என்று கூறினார்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவியின் லட்சியம், பல பணிகளைச் செய்வதற்கு வழிவகுக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அஷ்வனி குமார் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவிவகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE