நீலகிரி மாவட்டத்தில் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் மழலையர் பள்ளி திறக்கப்பட்டதால், குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
தமிழகத்தில் மழலையர் பள்ளிகளை திறந்துகொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்றுமுதல் பெரும்பாலான கட்டுப்பாடுகளுக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நா்சரி, விளையாட்டுப் பள்ளிகள், மழலையா் காப்பகங்கள், தொடக்கப் பள்ளிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், பனி தாக்கத்தால் குளிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் புத்தகப்பை மாட்டிக்கொண்டு உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். அவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், ஆசிரியைகள் அவர்களுக்கு மிட்டாய்களை கொடுத்து, விளையாட விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். பள்ளி நிர்வாகம் சார்பில் குழந்தைகளின் உடல் வெப்பநிலை பரிசோதித்து, குழந்தைகளை வகுப்பறைகளுக்கு அழைத்துச் சென்றனர்.
பெற்றோர்கள் கூறும்போது, “குழந்தைகள் இரண்டாண்டுகளாக வீட்டிலேயே அடைப்பட்டு இருந்தனர். அரசு கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதித்ததால், உற்சாகமாக பள்ளிக்கு புறப்பட்டு வந்தனர்” என்றனர்.