திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும், கேரள சட்டப்பேரவை உறுப்பினர் சச்சின் தேவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தின் மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். கல்லூரி மாணவியாக இருந்த இவரை மேயராக்கி அழகு பார்த்தது மார்க்சிஸ்ட் கட்சி. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கேரளம், அதிக அளவில் இளவயதினருக்குப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தது. அதன்மூலம் அதிகாரத்துக்கு வந்ததில் முக்கியமானவர் ஆர்யா ராஜேந்திரன். இவருக்கும், பாலுச்சேரி எம்எல்ஏ சச்சின் தேவுக்கும் திருமணம் நடக்க உள்ளது. சச்சின் தேவ், கேரள சட்டப்பேரவையில் மிக இளவயது உறுப்பினர் ஆவார். இப்போது 28 வயதாகும் சச்சின் தேவ், இந்திய மாணவர் சங்கத்தில் மாநில செயலாளராக உள்ளார். எஸ்எப்ஐ அமைப்பின் தேசிய இணைச் செயலாளராகவும் உள்ளார் சச்சின் தேவ்.
ஆர்யா ராஜேந்திரனும், சச்சின் தேவும் சிறுபிராயத்தில் இருந்தே இந்திய மாணவர் சங்கத்தில் வளர்ந்தவர்கள். அதனால் இருவருக்கு இடையிலும் நல்ல நட்பு இருக்கிறது. கொள்கைப்பிடிப்புள்ள இவர்கள், சேர்ந்து தம்பதிகளாக வாழ்வது பொருத்தமாக இருக்கும் என இந்த முடிவை எடுத்திருப்பதாக, கோழிக்கோட்டில் வசிக்கும் எம்எல்ஏ சச்சின் தேவின் தந்தை நந்தகுமார் தெரிவித்துள்ளார்.