கனமழையால் குளமாக மாறிய அரசு பள்ளி வளாகம்: மாணவர்கள் அவதி @ பூந்தமல்லி

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: பூந்தமல்லியில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த கனமழையால், அங்குள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் குளமாக மாறியது, இதனால் மாணவர்கள் அவதிக்குள்ளாயினர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. பூந்தமல்லி பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இங்கு 10 செ.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதனால், பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் குமணன்சாவடி, கரையான்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதில், குமணன்சாவடி பகுதியில் சேதமடைந்த டிரங்க் சாலையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாயினர்.

இதனிடையே பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை மழை நீர் சூழ்ந்ததால் அந்தப் பகுதி குளம்போல் மாறியது. பள்ளி வளாகம் மட்டுமல்லாமல், வகுப்பறைகளிலும் மழை நீர் புகுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்காததால், பள்ளியில் படித்து வரும் பூந்தமல்லி, மாங்காடு, மலையம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மழைநீர் முழுமையாக வடிய 3 நாட்களாகும் என கூறப்படுகிறது.

ஒவ்வொரு மழையின் போதும் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்குவதும், மழைவிட்ட பிறகு, சில நாட்களில் மழை நீர் தானாக வற்றுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலை இனியும் ஏற்படாமல் இருக்க பள்ளிக்கல்வித் துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE