சென்னை ஐ.சி.எஃப்-ல் வந்தே மெட்ரோ ரயில் இயக்கி சோதனை

By எம். வேல்சங்கர்

சென்னை: சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் வந்தே மெட்ரோ ரயில் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில், தற்போது, இந்த ரயிலை இயக்கி சோதனை நடத்தப்படுகிறது. ரயில்வே அமைச்சரகத்தின் ஒப்புதலுக்கு பிறகு, இந்த ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

சென்னையின் பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணியில் கவனம் செலுத்தப்படுகின்றன. இதுவரை 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டு உள்ளன. இவற்றில், 55-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதையடுத்து, அதிக அளவில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, அம்ரித் பாரத் ரயில் (சாதாரண வந்தே பாரத் ரயில்), வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில் முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த ரயில் தயாரிப்பு பணி தற்போது முடிந்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து ரயிலை இயக்கி சோதனை, உள் மற்றும் வெளிப்பகுதிகளில் பல்வேறு சோதனைகள் நடைபெற்று வருகின்றன.இது குறித்து சென்னை ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியதாவது: ''12 பெட்டிகளைக் கொண்ட வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி முடிந்துவிட்டது. இதில் ஏ.சி. வசதி, பயணிகளை கவரும் வகையில் உள்அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் இருக்கும்.

கண்காணிப்பு கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம்பெறும். ஒவ்வொரு பெட்டியிலும் 104 பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் நிற்க முடியும். அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில், உள்வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் உயர் திறன் கொண்டது. எனவே, அதிக சோதனைகள் மேற்கொள்வது அவசியமாகிறது.

ஐ.சி.எஃப் ஆலையை ஒட்டி, இந்த ரயிலை இயக்கி சோதனை நடத்தப்படுகிறது. மேலும், வெளிப்பகுதி, உள்பகுதியில் சோதனை செய்யப்படுகிறது. ரயில்வே அமைச்சரகத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு, வந்தே மெட்ரோ ரயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.'' இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE