சென்னை: செவ்வாய்க்கிழமை அதிகாலை அடித்த சூறைக்காற்று மற்றும் மழையால் சாலையில் விழுந்த ராட்சத மரத்தால் வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர். இந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென சூரைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. வேளச்சேரி - சின்னமலை சாலையில் ராட்சத மரம் ஒன்று இன்று காலை வேரோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
அத்துடன் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்பட மேலும் சில இடங்களிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி வாகனம் மற்றும் மரம் வெட்டும் இயந்திரங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முறிந்து விழுந்த மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் இந்த பகுதிகளில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு பின்பு இயல்பு நிலை திரும்பியது.