கரோனா பாதிப்பால் ரயில் சேவை குறைந்த அளவே இயக்கப்பட்டு வந்த நிலையில், சென்னையில் இன்று முதல் மின்சார ரயில்கள் 100 சதவீதம் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு நாடு முழுவதும் ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் முதல் அலை ஓய்ந்த நிலையில், ரயில் சேவை குறைந்த அளவே இயக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் பயணம் செய்ய கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வேலைக்கு செல்பவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அடையாள அட்டைகளை காண்பித்த பிறகே டிக்கெட் வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2வது அலையால் ரயில் சேவை மீண்டும் தடைபட்டது. பின்னர் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதையடுத்து, 3வது அலையும் வந்தது. ஆனால், பாதிப்பு அதிக அளவில் இல்லாததால் ரயில் சேவைகளின் எண்ணிக்கை மட்டும் குறைக்கப்பட்டதோடு, பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
கரோனா பாதிப்பால் சென்னையில் மின்சார ரயில் சேவை கடந்த சில மாதங்களாக குறைவான அளவிலேயே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதால் சென்னையில் இன்று முதல் மீண்டும் மின்சார ரயில் சேவை முழு அளவில் 100 சதவீதம் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று முதல் வார நாட்களில் 658 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.