திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காணொலி வாயிலாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று(பிப்.13) மாலை திண்டுக்கல் மாவட்டத்துக்கான பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அவரது விரிவான உரையின் சுருக்கப்பட்ட வடிவம் இங்கே:
”நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றியை போன்று, நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் பெற்றாக வேண்டும். அதன் மூலம், தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களை இன்னும் சிறப்பாக நம்மால் செயல்படுத்த முடியும்.
மாங்கரையாற்றின் குறுக்கே எட்டு பாலங்கள், கொடகனாற்றின் குறுக்கே நான்கு பாலங்கள், திண்டுக்கல் - நத்தம் ரயில்வே மேம்பாலம், திண்டுக்கல் முதல் பழனி வரை பாதயாத்திரை பக்தர்கள் நடப்பதற்கென்று தனியாக 5 கோடி ரூபாய் செலவில் நடைபாதை, கன்னிவாடி நாயோடையின் குறுக்கே அணை, யானைவிழுந்தான் ஓடையின் குறுக்கே அணை, நங்காஞ்சியாற்றின் குறுக்கே அணை, நல்லதங்காள் ஆற்றின் குறுக்கே அணை, சிறுமலையாற்றின் குறுக்கே அணை, சுக்காம்பட்டி, ரெட்டியார் சத்திரம், பஞ்சம்பட்டி, அய்யம்பாளையத்தில் உயர் அழுத்த மின் நிலையங்கள், ரெட்டியார்சத்திரம் அருகே அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, கன்னிவாடியில் மகளிர் விடுதி மற்றும் மாணவர் விடுதிகள், மருதாநதி அணையில் கிணறு அமைத்து 20 ஆண்டுகால குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு, அய்யங்கோட்டை பொதுமக்கள் மருதாநதி ஆற்றினை கடந்து செல்ல மேம்பாலம், திண்டுக்கல் வட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக ஆத்தூர் தாலுகாவை ஏற்படுத்தி, அதற்கான அலுவலகக் கட்டடங்களை கட்டிக் கொடுத்தது.. என்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஏராளமான சாதனைகளை திமுக அரசு செய்து கொடுத்துள்ளது.
மேலும், கடந்த சில மாதங்களில் செய்திருக்கின்ற பணிகள் மற்றும் செய்யவிருக்க உள்ள பணிகளும் ஏராளம்.
திமுக வரலாற்றை முழுதாக அறியாமல், தமிழர்களுக்கு எதிரான, தமிழ்நாட்டுக்கு எதிரானவர்களின் சதிவலையில் சிக்கியிருக்கின்ற சிலரையும் மீட்டாக வேண்டும்! அதற்கு நம்முடைய சாதனைகளை வீதிதோறும், வீடுதோறும் கொண்டு செல்ல வேண்டும் இதையெல்லாம் தேர்தலுக்காக மட்டுமன்றி, இந்த இனத்தை பாதுகாப்பதற்காக நாம் செய்தாக வேண்டும்.
நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,825 பதவிகளிலும், திமுக வேட்பாளர்களும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களும்தான் வெற்றி பெற்றாக வேண்டும். சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றுகின்ற நல்ல பல திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேர உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக நம் கையில் இருக்க வேண்டும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் தேர்தலையே நடத்த மனமில்லாமல் நாட்களைக் கடத்திக் கொண்டு போன ஆட்சிதான்- அதிமுக ஆட்சி. உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் தி.மு.க.வினர் வெற்றி பெற்று, அதிமுகவினருடைய ஊழல்களை அம்பலப்படுத்துவார்கள் என்று, அஞ்சி உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் வைத்திருந்த ஆட்சிதான்- அ.தி.மு.க. ஆட்சி.
அன்றைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி சுண்ணாம்பு பவுடர் வாங்குவதில் இருந்து, பினாயில் வாங்குவது வரை ஊழல் செய்த, ‘கறை படிந்த கைகளுக்குச் சொந்தக்காரர். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 12 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தை சுருட்டி இருக்கிறார்கள். இதையெல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, டேனியல் ஜேசுதாஸ் என்பவர் அம்பலப்படுத்தி இருக்கிறார். இதையெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கேள்வி கேட்பார்கள் என்று உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் இருந்தார்கள்.
சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் 464 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோவை மாநகராட்சி திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தத்தில் 346 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருடைய உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுடைய வருவாய், சில ஆண்டுகளில் மட்டும் பலமடங்கு உயர்ந்திருக்குறது என்று லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருக்கிற முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்திருக்கிறது. கடந்த 2014 முதல், அனைத்து ஒப்பந்தங்களையும் தன்னோட குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது தன்னோட பினாமிகளுக்கோ மட்டுமே கொடுத்திருக்கிறார் வேலுமணி. இவர்களுக்கு சென்னை, கோவை மாநகராட்சிப் பணிகள் அனைத்தும் விதிமுறைகளை மீறித்தரப்பட்டிருக்கிறது. இதனுடைய மதிப்பு 811 கோடி ரூபாய். இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்ட லட்சணம்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைச் சுத்தமாகச் சீரழித்த ஆட்சிதான்- அதிமுக ஆட்சி. இரண்டு டி.ஜி.பி.க்களை போட்டு, இரட்டை தலைமை ஆக்கி, தமிழ்நாடு காவல்துறையையே களங்கப்படுத்திய ஆட்சி அதிமுக ஆட்சி. பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் 6 பேரை கொன்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை கொன்றது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் வேடிக்கை பார்த்தது. பெண் போலீஸ் எஸ்.பி.களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலையை உருவாக்கியது.
கூவத்தூரில் தவழ்ந்து பழனிசாமி பெற்ற ஆட்சி, மக்களால் தூக்கியெறியப்பட்டு ஒன்பது மாதகாலம் ஆகிறது. அவருடைய கோமாளி கூத்துகளை, ஊழல் விளையாட்டுகளை மக்கள் மறந்துவிட்டு இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓட வைத்த மாதிரி பழனிசாமி பேசுகிறார்.
பழனிசாமி அவர்களின் சாதனை என்ன என்று யாராவது கேட்டால், ‘மினி கிளினிக்’ என்று சொல்லுவார். ஆனால், உருப்படியாக எந்த இடத்திலும் அவர் மினி கிளினிக் அமைக்கவில்லை! அம்மையார் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்த, ’குறைகளை சொல்ல முதலமைச்சருக்கு போன் செய்கிற திட்டத்துக்கு’ தன்னுடைய இனிஷியலை போட்டுக்கொண்டவர்தான் பழனிசாமி! ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தப்போது தமிழ்நாட்டுக்கு "விஷன்-2023" என்று ஒரு திட்டத்தை அறிவித்தார். 2012-ஆம் ஆண்டு அந்த கொள்கையை வெளியிட்டார். இதில் எதாவது ஒன்றை, கடந்த 9 ஆண்டுகளில் நிறைவேற்றினார்களா?
அம்மையார் ஜெயலலிதா அவர்கள், முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கடந்த 2015-ஆம் ஆண்டு நடத்தினார். அதில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அறிவித்தார். 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக சொன்னார். 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று சொன்னார். இதெல்லாம் எங்கே?
இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பழனிசாமி நடத்தினார். 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொன்னார். 3,00,431 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக சொன்னார். 10,50,000 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கப் போகிறதாக சொன்னார். ஆனால் ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை! அடுத்ததாக, 13 நாள் வெளிநாட்டு சுற்றுலா சென்றார் பழனிசாமி. 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொன்னார். கரோனா காலத்தில் 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுவிட்டதாகச் சொன்னார். இதில் எதாவது நடந்ததா? தோல்வியின் மொத்த உருவமாகக் காட்சியளிக்கிறார் பழனிசாமி!
நாம் மக்களுக்காக ஆற்றிவரும் பணிகளை நான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் 49 அறிவிப்புகளுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 75 விழுக்காடு அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதி- நிதிநிலை அறிக்கை- 110 விதிகள் என்று மொத்தம் 1,641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 75 விழுக்காட்டுக்கும் மேலான அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
பழனிசாமி - பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனி சீரழித்த நிதி நிலைமையை, கொஞ்சம் கொஞ்சமா மீட்டுக் கொண்டு வருகிறோம். கடன் மேல கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்ட முடியாமல், வட்டி கட்டக் கடன் வாங்கி, அதுக்கு வட்டி கட்டி என்று தமிழ்நாட்டை 5 லட்சம் கோடி கடனில் தமிழ்நாட்டைத் தள்ளி, கஜானாவை கபளீகரம் செய்து விட்டார்கள்.
இந்த நிலையில் இருந்து மீட்டு, விரைவில் ‘மகளிர் உரிமைத் தொகையான’- மாதம் 1000 ரூபாயையும் வழங்கப் போகிறோம். யாரையும் நாங்கள் ஏமாற்றப் போவதில்லை. இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான்! இது தமிழ்நாட்டு தாய்மார்களான என்னோட சகோதரிகளுக்கு நன்றாகத் தெரியும்.
நான் காணொலியில் உங்களைச் சந்தித்திக் கொண்டு இருக்கேன். மக்களைச் சந்திப்பதை தவிர்ப்பதற்காக, நான் காணொலியில் பரப்புரை செய்வதாக, மக்களால் புறக்கணிக்கப்பட்ட சிலர் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அவங்களுடைய கற்பனைத் திறனைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது. இந்த ஸ்டாலின் எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பவன். வீதிவீதியாக மக்களிடம் நடந்து சென்று வாக்குச் சேகரித்தவன். மக்களுக்கு- எங்கே எப்போது பாதிப்பு என்றாலும், நேரடியாக அந்த இடத்திற்குச் சென்று மக்களைச் சந்திக்கின்றவன். மழை வெள்ளப் பாதிப்புகள் வந்தபோது, சென்னையின் பெரும்பாலான பகுதிகளுக்கு பகல் இரவு பாராமல் மழை கோட் போட்டு, குடை பிடித்தபடி சென்றேன். நான் எங்கே சென்றாலும், வழியில் என்னைப் பார்க்கக் காத்திருக்கும் மக்களிடம், என்னுடைய வாகனத்தை நிறுத்தி மனு வாங்குகிறேன். என்ன கோரிக்கை என்று கேட்கிறேன். இப்படிப்பட்ட என்னைப் பார்த்து, மக்களைப் பார்க்க பயம் என்று சொல்கிறவர்கள், தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்களா?
நான் தேர்தல் பயணம் கிளம்பி, எல்லா இடத்திலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடினால் ‘பார்த்தீர்களா? கரோனா கால கட்டுப்பாடுகளை முதலமைச்சரே மீறுகிறார். அதிகமான கூட்டத்தைக் கூட்டுகிறார்' என்று அவர்கள் சொல்வார்கள். வயிற்றெரிச்சல்காரர்களது சொற்களையும், வதந்திகளையும் புறம்தள்ளி, மக்கள் பணிகளைத் தொடர்வோம். ‘என்றைக்கும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்’ என்ற நிலைய அடைய, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான வெற்றியை பெறுவோம்!”
இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.