பாஜகவின் செயல்திட்டங்களை கூறி திமுகவைச் எச்சரிக்கும் எடப்பாடி!

By கி.பார்த்திபன்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாஜகவும் தனித்து போட்டியிடுகிறது. எனினும், இந்த கூட்டணி முறிவு வெறும் கண்துடைப்பு. மக்களை ஏமாற்ற அதிமுக, பாஜகவும் நாடமாடுகிறது, என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதை ஆமோதிப்பது போல் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கள் அமைந்துள்ளன.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் செயல்திட்டங்களில் ஒன்றான ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை கூறி இது அமுலுக்கு வரும்போது திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பர் என்றார். அதுபோல் பாஜக அதன் கூட்டணியில்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு குடைச்சல் கொடுத்து வருகிறது. மேற்குவங்க மாநில சட்டப்பேரவையை அம்மாநில ஆளுநர் முடக்கியுள்ளார். அம்மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் இடையே நிலவும் முட்டல் மோதலே இதற்கு காரணம் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்தும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

இச்சூழலில் சேலம் ஓமலூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி, மேற்குவங்கம் போல் தமிழக சட்டப்பேரவையும் முடக்க நேரிடும் என தெரிவித்தார். திமுகவை குறிவைத்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டாலும் மத்திய அரசின் செயல் திட்டங்கள், செயல்பாடுகளைக் மையப்படுத்தியே பேசி வருகிறார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு பாஜகவுடனான கூட்டணி தொடர்வதை உறுதி செய்கிறது. கூட்டணி முறிவு என்பது வெறும் நாடகம் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மை தான் போலும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE