மேகேதாட்டு அணை தொடர்பாக பேச்சு நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்தால் ஏற்கக்கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: மேகேதாட்டு அணை தொடர்பாக பேச்சு நடத்த மத்திய அரசிடமிருந்து அழைப்பு வந்தால் அதை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேகேதாட்டு அணை சிக்கல் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தமிழகம், கர்நாடகம், புதுவை ஆகிய மாநில அரசுகள் பேச்சு நடத்தினால் மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தீர்வு காண முடியும் என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் வி.சோமண்ணா கூறியிருக்கிறார்.

மேகேதாட்டு அணை சிக்கலில் நீதியின் பக்கம் நிற்க வேண்டிய மத்திய அமைச்சர் கர்நாடகத்தின் குரலாக ஒலித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தீர்க்க முடியாத சிக்கல்களைக்கூட பேசித் தீர்க்க முடியும். ஆனால், மேகேதாட்டு அணை சிக்கல் அப்படிப்பட்டதல்ல.

காவிரி ஆற்று நீர் சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளையும், தண்ணீரையும் பறிக்கும் நோக்கத்துடன் கர்நாடக அரசால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டம்தான் மேகேதாட்டு அணை திட்டம். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டு அணையை கட்ட முடியாது.

அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில் அதுகுறித்து தமிழக அரசு எவ்வாறு பேச்சு நடத்த முடியும். அவ்வாறு பேச்சு நடத்த ஒப்புக்கொள்வதே தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்ப்பதாகத்தான் அமையும்.

மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகை வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகி விடும். எனவே, மேகதாது அணையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சராக கர்நாடகத்தைச் சேர்ந்த சோமண்ணா நியமிக்கப்பட்டபோதே அதற்கு தமிழக விவசாயிகளிடம் எதிர்ப்பு எழுந்தது. மத்திய அமைச்சரான பிறகும் கர்நாடகத்துக்கு ஆதரவாக பேசியதன் மூலம் அமைச்சர் சோமண்ணா நடுநிலையையும், நம்பகத்தன்மையையும் இழந்து விட்டார். இனியாவது அவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராக செயல்பட வேண்டும்.

எனவே, மேகேதாட்டு அணை தொடர்பாக பேச்சு நடத்த மத்திய அரசிடமிருந்து அழைப்பு வந்தால் அதை தமிழக அரசு ஏற்கக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE