உதயநிதி ஸ்டாலினுக்கு எச்.ராஜா கொடுத்த புதிய பட்டம்

By கே.எஸ்.கிருத்திக்

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 99 வார்டுகளில் போட்டியிடுகிறது பாஜக. அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கெனவே நடிகர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர்கள் செந்தில், காயத்ரி ஜெயராம் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து சென்றுள்ள நிலையில், இன்று இரவு எச்.ராஜா பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- திமுக என்ன சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க? அதிலும் 'இளைய பட்டம்' உதயநிதி ஸ்டாலின் என்ன சொன்னாரு? தங்க நகைக்கடனை தள்ளுபடி செய்வோம். இன்னும் வாங்கலைன்னா இப்ப வாங்குங்க. நாங்கதான் ஆட்சிக்கு வருவோம். முதல் நாளே அத்தனை நகைக்கடனையும் தள்ளுபடி பண்ணுவோம்னு சொன்னாரு. செஞ்சாங்களா? போகிற பக்கம் எல்லாம் மக்கள் செவில்ல குடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. அவரால எந்த ஊருக்கும் நிம்மதியா போயிட்டு வர முடியல.

அதுமட்டுமா? வேலையில்லாத எல்லா தாய்மார்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்றார்கள். ஜெயிச்ச பிறகு என்ன சொன்னாங்க, தகுதியுள்ள தாய்மார்களை கண்டுபிடித்து கொடுபபோம் என்றார்கள். பிறகு அதைக் கண்டுபிடிக்க ஒரு கமிட்டி என்றார்கள். எப்படி சிறுத்தையின் புள்ளிகளை அழிக்க முடியாதோ, அதேமாதிரி திமுகவின் டிஎன்ஏவையும் மாற்ற முடியாது. 1967ல் எப்படி ரூபாய்க்கு 3 படி அரிசி என்றார்கள், ஜெயித்தவுடன் அண்ணா என்ன சொன்னாரு 3 படி லட்சியம், 1 படி நிச்சயம் என்றார். கடைசியில ஒரு படி கூட போடல. செய்யாட்டி கூட பரவாயில்லை. பொங்கல் தொகுப்புல மட்டும் பல கோடி ஊழல் பண்ணியிருக்காங்க. ஆனா, பாஜக அரசு இந்த கரோனா காலத்துல 80 கோடி குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கியிருக்குது. அதுமட்டுமா நம்ம உயிரைக் காப்பாத்துறதுக்காக எல்லாத்துக்கும் 2 டோஸ் தடுப்பூசியை இலவசமா போட்டிருக்குது பாஜக அரசு. உயிரைக் கொடுத்த மோடிக்கு ஒரே ஒரு முறை ஓட்டுப்போட்டு, தேங்க் யு மோடி சொல்லணுமா வேண்டாமா? செய்த நன்றி மறந்தவர்களுக்கு உய்வில்லை. இந்தவாட்டி பாஜகவுக்கு ஓட்டுப்போடலைன்னா அதுக்குப் பாவ மன்னிப்பே கிடையாதுன்னு நான் சொல்லலை திருவள்ளுவர் சொல்லியிருக்காரு.

இவ்வாறு அவர் பேசினார். பிரச்சார கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், 43, 44, 46, 48வது வார்டு பாஜக வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE