‘போதையின் பிடியிலிருந்து மாநிலத்தை மீட்போம்’: பஞ்சாப்பில் அமித் ஷா சூளுரை!

By காமதேனு

’போதையின் பிடியிலிருந்து பஞ்சாப் மாநிலத்தை பாஜக மீட்கும்’ என பஞ்சாப் பரப்புரையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

பிப்.20 அன்று நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அங்கே தீவிரமான பரப்புரை மேற்கொண்டு வரும் அமித் ஷா, இன்று லூதியானா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

மாநிலத்தின் தற்போதைய முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான சரண்ஜீத் சிங் சன்னியை குறிவைத்து அமித் ஷா அப்போது தாக்கிப்பேசினார். ‘சரண்ஜீத் சிங் சன்னியால் பஞ்சாப்புக்கு பாதுகாப்பான ஆட்சியை வழங்க முடியவில்லை. தேசத்தின் பிரதமருக்கான பயணத்தடத்தை பாதுகாப்பாக அமைத்து தர முடியாத முதல்வர், எப்படி மாநிலத்தின் மக்களைக் காப்பாற்றுவார்?’ என்றார் அமித் ஷா.

பஞ்சாப்பின் தேர்தல் தோறும் பேசுபொருளாகும், பஞ்சாப்பின் அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு குறித்தும் சில உத்திரவாதங்களை அமித் ஷா வழங்கினார். ‘பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி பஞ்சாப்பில் அமைந்தால், போதைப்பொருள் தடுப்பு அமைப்பான, என்சிபியின் 4 மண்டல அலுவலங்களை பஞ்சாப்பின் முக்கிய நகரங்களுக்கு கொண்டுவருவோம். மேலும் மாவட்டம் தோறும் போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படையை நிறுவுவோம்’ என்றார்.

எல்லை மாநிலமான பஞ்சாப்பில் பாதுகாப்பு குறித்த அச்சமும், எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தலும் நீண்ட காலமாக நிலவி வருகிறது. எனவே தனது பரப்புரையில் இந்த 2 அம்சங்களுக்கு முக்கியத்துவம் தந்து அமித் ஷா பரப்புரை மேற்கொண்டார்.

VIEW COMMENTS