தொடர் விடுமுறை: மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

By என்.கணேஷ்ராஜ்

மூணாறு: சனி,ஞாயிறு மற்றும் பக்ரீத் தொடர் விடுமுறையை முன்னிட்டு மூணாறுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.

தேனி மாவட்டத்துக்கு அருகில் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான மூணாறு உள்ளது. பசுமையான பள்ளத்தாக்குகள், மலைத்தொடர்கள், மூடுபனி, சில்லென்ற பருவநிலை போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாய் கவர்ந்து வருகின்றன.

இதனால் உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகளவில் வருகின்றனர். தற்போது இங்கு தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்தது.

இந்நிலையில் சனி, ஞாயிறு மற்றும் பக்ரீத் தொடர் விடுமுறையால் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்தனர். இதனால் மாட்டுப்பட்டி அணை, குண்டலணை, எக்கோ பாயிண்ட், சின்னக்கானல் அருவி உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்தாலும் வாகனங்களில் காத்திருந்து மூணாறின் பல பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர்.

இது பற்றி ஜீப் ஓட்டுநர்கள் கூறுகையில், “தொடர் விடுமுறையால் சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் இருந்தது. ஆனால் மழை, பள்ளி திறப்பு போன்ற காரணங்களால் இனி இவர்களின் வருகை குறைந்து விடும். இரண்டு மாதம் பெரியளவில் எங்களுக்கு வருவாய் இருக்காது. சீசனில் கிடைத்த வருமானத்தின் மூலம் சமாளித்துக் கொள்வோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE