உதவியாளர் மகனின் திருமணத்தை நடத்தி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி @ மேலூர்

By என்.சன்னாசி

மதுரை: மேலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த தனது உதவியாளர் ரவீந்திரனின் மகன் திருமணத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உதவியாளராக இருப்பவர் மதுரையைச் சேர்ந்த ரவீந்திரன். இவரது மகன் சுதர்ஷனுக்கும், மேலூரை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் மீனாட்சி (எ) ஜனனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடந்தது. இதில் பங்கேற்க தமிழக ஆளுநருக்கு மணமகன் வீட்டார் சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், உதவியாளர் மகன் திருமண விழாவில் பங்கேற்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் மதுரை வந்தார். பிறகு கார் மூலம் மேலூருக்கு சென்றார். திருமண விழாவில் பங்கேற்ற அவர், திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். பிறகு பூக்களை தூவி மணமக்களை வாழ்த்தினார்.

முன்னதாக தமிழக ஆளுநர் ரவிக்கு மணவீட்டார் சார்பில், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மணமக்களை வாழ்த்திய பிறகு ஆளுநருடன் மணமக்கள் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார். ஆளுநரின் மேலூர் வருகையையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE