மக்களுக்கான ஆட்சி தரும் எங்களுக்கு வாக்குகளைத் தாருங்கள்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

By காமதேனு

இன்று (பிப்.12) மாலை, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியதன் சுருக்கம்.

திருப்பூர் குமரன் வாழ்ந்த ஊர் இந்தத் திருப்பூர். தியாகி திருப்பூர் குமரனுக்கு நினைவுத்தூண் அமைத்த ஆட்சி திமுக ஆட்சி! திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் இறந்தபோது, திருப்பூர் குமரனின் நினைவகத்தில் அவரை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ததும் தி.மு.க. ஆட்சிதான்!

1965 மொழிப்போராட்டத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் கல்லூரி மாணவர்கள் தமிழ்மொழியைக் காக்கவும், இந்தித் திணிப்புக்கு எதிராகவும் போராடியபோது திருப்பூரில்தான் பள்ளி மாணவர்களும் எழுச்சியோடு போராடினார்கள்.

இப்போது மாநகராட்சியாகவும் புதிய மாவட்டமாகவும் திருப்பூர் திகழ்வதற்குக் காரணம் திமுக ஆட்சிதான். இதன் தொடர்ச்சியாகக் கடந்த நவம்பர் மாதம் இங்கு நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டேன்.

திருப்பூர் மாவட்டத்தில் 11 அரசுத் துறைகளின் சார்பில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாமே கடந்த 8 மாதகாலத்தில் செய்து தரப்பட்ட திட்டப்பணிகள். அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் ஏராளமான திட்டங்கள் வரப் போகின்றன.

ஆறாவது முறையாகத் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் நாம் அமர்ந்திருக்கிறோம். நம்முடைய ஆட்சிக்கால சாதனைகளைச் சொல்வதாக இருந்தால், இன்றைக்கு முழுவதும் என்னால் பட்டியல் போட முடியும். அவ்வளவு சாதனைகள் கொட்டிக் கிடக்கின்றன.

திராவிட இயக்கம் இந்த நாட்டுக்கு வழங்கிய மாபெரும் கருத்தியல்கள்தான் சமூகநீதியும் மாநில சுயாட்சியும்! இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக் கருத்தியலை மலர வைப்பதற்கான முயற்சியில்- என்னை நானே ஒப்படைத்துக் கொண்டு இருக்கிறேன்! கடந்த சில நாட்களாகச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அகில இந்தியா முழுமைக்குமான சமூகநீதிக் கூட்டமைப்பை உருவாக்கத் திட்டமிட்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன். இந்தியா என்பது சட்ட நீதி நாடாக மட்டுமில்லாமல் சமூக நீதி நாடாக ஆக்கப்படவேண்டும் என்பதுதான் நம் அனைவரின் முக்கியக் குறிக்கோள்!

அதேபோல- மாநிலங்களின் கூட்டுச் சேர்க்கைதான் ஒன்றிய அரசாகும். அந்த ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவத்துடன் செயல்பட வேண்டும். அதற்கு மாநிலங்கள் எல்லாம் அதிக அதிகாரம் கொண்டதாகச் செயல்பட- வழிவகை செய்யப்பட வேண்டும். இந்த மாநில சுயாட்சியைத்தான் தன்னோட கடைசிக் கட்டுரையாகப் பேரறிஞர் அண்ணா எழுதினார். இதை, ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி' என்று ஒற்றை வரியில் வடித்துக் கொடுத்தார்தலைவர் கலைஞர்.

அந்தக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு இன்றைக்கு ஆபத்து வந்திருக்கிறது. அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசே வைத்துக் கொள்ளும் சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்குகிறது. “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யாருக்கு பாதிப்பு என்று?” கேள்வி கேட்டுச் சிறுபான்மை மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியது அதிமுக. ஆனால், அந்தச் சட்டம் வரக்கூடாது என்று வாக்களித்து எதிர்த்தது தி.மு.க. அதேபோல, ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து உழவர்களையும் ஒரே நேரத்தில் கோபம் அடைய வைத்தது. ஆனால், மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் அதே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக. அதை விவசாயிகளோடு தோளோடு தோள் நின்று எதிர்த்தது திமுக. ஆட்சிக்கு வந்ததும் முதலில் இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து சட்டமன்றத்திலேயே நிறைவேற்றினது திமுக.

சர்வாதிகார மனப்பான்மை கொண்ட ஒன்றிய பா.ஜ.க. அரசை - ‘முடியவே முடியாது’ என்று சொல்லிக்கொண்டு இருந்த பிரதமர் மோடியை அறவழிப் போராட்டம் மூலம் பணிய வைத்தவர்கள் விவசாயிகள்.

நீட் என்ற பெயரால் ஏழை - எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி பெறுவதற்குத் தடையை ஏற்படுத்தி; மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைக்கிறார்கள். நீட் தேர்வு செல்லும் என்று தீர்ப்பு வருவதற்கு முன்பே மெடிக்கல் கவுன்சிலை விட்டு - மக்கள் நல்வாழ்வுத் துறைக்குக் கடிதம் எழுதச் சொன்னது பா.ஜ.க.தான். இது அப்போது முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதாவுக்குத் தெரிந்ததும்- ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்- ஏன் இப்படி அவசர அவசரமாகச் செயல்படுகிறீர்கள்’ என்று கேள்வியெழுப்பி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.

அம்மையார் ஜெயலலிதாவே நீட் தேர்வைக் கொண்டுவர பா.ஜ.க.தான் முயற்சிக்கிறது என்று சொன்ன பிறகும்; பா.ஜ.க.வுக்குப் பல்லக்குத் தூக்க நீட் தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதித்த தனது மலிவான செயலை மறைக்க வழக்கம்போல கூச்சமேபடாமல் பொய் சொல்கிறார் திருவாளர் ‘பச்சைப் பொய்’ பழனிசாமி.

மாநில சுயாட்சியைக் கம்பீரமாகச் சொன்ன பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் கொள்கைகளில் இருந்து நழுவிவிட்டீர்கள். சுயமரியாதை உணர்வை ஊட்டிய திராவிடக் கொள்கைகளுக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போது எம்.ஜி.ஆரையும் - அம்மையார் ஜெயலலிதாவையும் கூட மறந்துவிட்டு- ‘மோடி எங்கள் டாடி’- என்று சரணாகதி அடைந்துவிட்டீர்களே!

புதிய கல்விக் கொள்கை மூலமாகவும் பல ஆபத்துகள் வரப்போகின்றன. அதையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அடுத்ததாக- ‘ஒரே நாடு - ஒரே பத்திரப் பதிவு’ என்று கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இவர்கள்- ‘ஒரே… ஒரே…’என்று முன்வைக்கும் முழக்கம் எல்லாமே இந்த நாட்டை ஒற்றையாட்சித் தன்மை கொண்ட நாடாக மாற்றுவதற்கான முயற்சிதானே தவிர, வேறல்ல! எனவேதான் இந்தியா முழுமைக்கும் மாநில சுயாட்சித் தத்துவத்தை மலர வைக்கப் போராடியும், வாதாடியும் வருகிறோம்!

வந்தாரை வாழவைக்கும் திருப்பூர் என்று பெயரெடுத்த ஊர். திருப்பூர் மாவட்டம் என்பது சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நிறைந்த மாவட்டம் என்பதால், அது தொடர்பாக இந்த ஒன்பது மாதகாலத்தில் செய்து தரப்பட்ட நன்மைகள மட்டும் நான் இங்குப் பட்டியலிட விரும்புகிறேன்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டு நிறுவனங்களுக்கு மானியமாக 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 168 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தொழில் நடத்துவோர் பெறவேண்டிய சட்டரீதியான உரிமங்கள் பெற ஆறுமாத கால அவகாசம் வழங்கப்பட்டது. சிறு, குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்க வல்லுநர் குழுவை அமைத்தோம். மானியம் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கினோம்.

தொழிலாளர்களுக்குக் குறைந்த வாடகைக் குடியிருப்பு வளாகங்கள் சென்னை, கோவையில் அமைக்கப்பட இருக்கிறது. இளைஞர்களுக்குத் தொழில் தொடங்க மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 2,387 பேருக்கு தலா இரண்டரை லட்சம் ரூபாய் தரப்பட்டுள்ளது.

பருத்தி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீது விதிக்கப்படும் 1 விழுக்காடு சந்தை நுழைவு வரியை நாங்கள் தற்போது நீக்கி உள்ளோம். இதன் விளைவாக, இந்திய பருத்தி கார்ப்பரேஷன், தற்போது சேலம், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் பஞ்சுக் கிடங்குகள் அமைத்திட முன்வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சந்தைவரி மட்டுமில்ல சென்வாட் வரியை நீக்க நடவடிக்கை எடுத்ததும் திமுகதான்.

இப்படி நாள் முழுக்க என்னால் சொல்லிக்கொண்டே போக முடியும். நேற்று "தி இந்து பத்திரிகையில்"- ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. ‘Tamil Nadu in Focus’- என்கிற அந்தக் கட்டுரையில், தொழில் வளர்ச்சி குறித்து வந்திருக்கிறது. “முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்த பிறகு பஞ்சுக்கு உள்ள மார்க்கெட் கமிட்டி வரியை நீக்கினார். அதனால் ஜவுளித் தொழில் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும்"- என்று போட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் சொல்லியிருக்கிறது. அந்தச் சுய உதவிக்குழுக்களை முதலில் உருவாக்கியது கலைஞர். இந்த இயக்கம் எத்தகைய தொலைநோக்குத் திட்டங்களைக் கொண்டுவந்து தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறது என்பதற்கு இதுவே சாட்சி!

அண்மையில், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வெளியாகி இருக்கிறது. "குஜராத் வைர வியாபாரிகளுக்கு 5 விழுக்காடு வரியைக் குறைத்துள்ளீர்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள- திருப்பூர் பின்னலாடை வணிகர்களுக்கு எந்தவிதச் சலுகையும் வழங்கவில்லை'' என்று தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு அரசு உங்களுக்கு முழுமையாக உதவத் தயாராக இருக்கிறது!

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி இலக்கை எட்டமுடியாமல் போனதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்தே தொழில் நிறுவனங்கள் இன்னும் மீளவில்லை. ஜி.எஸ்.டி. வரிக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு திருப்பூரின் மொத்த வர்த்தகம் 24 விழுக்காடு குறைந்துவிட்டதாக வர்த்தகர்கள் சொல்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். மகளிருக்கு பேருந்துகளில் அளிக்கப்பட்ட இலவசப் பயணம் நல்ல பலனைத் தந்துள்ளது. 40 விழுக்காடாக இருந்த மகளிர் பயணிகள் எண்ணிக்கை இன்று 61 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. கரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், 27 ஆயிரத்து 432 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழை மக்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு- 18 ஆயிரத்து 526 பேருக்கு வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

எல்லோரின் மேம்பாட்டுக்கும் முன்னுரிமை தரும் ஆட்சியாக இந்த ஒன்பது மாதச் செயல்பாடுகளைப் பார்த்த மக்கள்- இனி, எந்நாளும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் தமிழ்நாட்டில் தொடர வேண்டும் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.

‘மக்களிடம் செல்’ என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. மக்களிடம் சென்றோம்! ‘மக்களுக்காக வாழ்’ என்று சொன்னார் அவர். மக்களுக்காக வாழ்கிறோம்! அதனால்தான், ‘மக்களுக்காக ஆட்சி செய்’ என்று மக்களாகிய நீங்கள் எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறீர்கள்! உங்களது நம்பிக்கையை எந்நாளும் காப்போம். மக்களுக்கான ஆட்சி தரும் எங்களுக்கு நீங்கள் வாக்குகளைத் தாருங்கள்! திமுகவுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கும் முழு வெற்றியைத் தாரீர்! முழுமையான இடங்களைத் தாரீர்! எனக் கேட்டு உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி எனச் சொல்லி விடை பெறுகிறேன்! நன்றி! வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE