அஞ்சுகம் பூபதிக்கு ஆண் குழந்தை

By கரு.முத்து

தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நிறைமாத கர்ப்பிணியாக பிரச்சாரத்தில் அஞ்சுகம் பூபதி

தஞ்சாவூர் மாநகராட்சி 51-வது வார்டில், திமுக சார்பில் மருத்துவர் அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார். முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பூபதியின் மகளான இவர், ஏற்கெனவே 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், தஞ்சாவூரில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட அனுபவமும் உள்ளவர். தற்போது தஞ்சாவூர் திமுக மத்திய மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருக்கிறார்.

இவரது கணவர் வெற்றிக்குமார், திராவிடர் கழகத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கிறார். இவர்களுக்கு ஏற்கெனவே மூன்றரை வயதில் கயல் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அஞ்சுகம் பூபதிக்கு, தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் 51-வது வார்டில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. பிப்.25-ம் தேதி, இவருக்கு குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும், ஓய்வெடுக்காமல் தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பிரச்சாரத்துக்கு கிளம்பிய, அஞ்சுகம் பூபதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிற்பகலுக்கு மேல் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக அஞ்சுகம் பூபதியின் கணவர் வெற்றிக்குமார் தெரிவித்தார்.

தஞ்சை மாநகராட்சிக்கான தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றும் பட்சத்தில், அஞ்சுகம் பூபதியே மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தஞ்சை வட்டாரத்தில் உலவும் முக்கிய தகவல். இந்நிலையில் அவருக்கு கூடுதல் பரிசாக குழந்தையும் பிறந்திருப்பது, திமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE