கடலில் சிக்கி தத்தளிப்போரை பாதுகாக்கும் ட்ரோன் சோதனை

By ரஜினி

கடலில் சிக்கி தத்தளிப்போரை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் சோதனை ஓட்டம், பெசன்ட் நகர் கடற்கரையில் தொடங்கியது.

சென்னை கடற்கரைகளில் கூட்டங்களை கண்காணித்து குற்றங்களை தடுக்கவும், கடற்கரைகளில் பாதுகாப்பு பணியை பலப்படுத்தவும் ரூ.3.6 கோடி மதிப்பில் 3 வகையான 9 ஆளில்லா விமானங்களை தமிழக காவல் துறை வாங்கியது.

அதில் உடனடியாக உதவுவதற்கு ஏதுவாக, இரவு நேரங்களிலும் துல்லியமான காட்சிகளைப் பதிவு செய்யும் வகையிலும் நுண்ணிய எச்டி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் ஒலிபெருக்கியுடன், 2 கிமீ தூரத்துக்கு 30 நிமிடம் தொடர்ந்து பறக்கும் 6 ஆளில்லா விமானங்களும், நீண்ட தூரத்தை கண்காணிக்கும் வகையில் சுமார் 100 நிமிடங்களுக்கு 3 கிமீ தூரம்வரை சென்று கண்காணிக்கும் வகையில் வசதிகளைக் கொண்ட 2 ஆளில்லா விமானங்களும், அதிக திறன் கொண்ட அதிக எடையை தூக்கிப் பறக்கும் வகையில் சுமார் 15 நிமிடங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் பறக்கும் வகையில் அமைப்புடைய ஆளில்லா விமானம் ஒன்றும் வாங்கப்பட்டுள்ளன.

ட்ரோன் சோதனை ஓட்டம்

குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் குளிக்கச்சென்று பலர் நீரில் மூழ்கி உயிரிழப்பது அதிகரித்து வருவதால், அவர்களை உயிருடன் மீட்பதற்காக, கடலில் தத்தளிக்கும்போது லைப் ஜாக்கெட் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் சோதனை ஓட்டமானது, சென்னை காவல் இணை ஆணையர் நரேந்திரநாயர் தலைமையில் இன்று பெசன்ட் நகரில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ட்ரோன் மூலமாக கண்காணிக்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE