சேவைக் குறைபாடு: பாளையங்கோட்டை கனரா வங்கி கிளை மேலாளருக்கு ரூ.25,000 அபராதம்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: சேவைக் குறைபாடு காரணமாக பாளையங்கோட்டை கனரா வங்கி கிளை மேலாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை அருகே இட்டேரி எமரால்டு தெருவைச் சேர்ந்தவர் எமரால்டு ஹேனா பாக்கியவதி. கல்லூரியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பாளையங்கோட்டை எஸ்டிசி கல்லூரியில் உள்ள கனரா வங்கியின் மூலம் தனது ஊதியத்தை பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு வங்கியில் இவர் ரூ.1.70 லட்சம் கடனாக பெற்றிருந்தார்.

இதற்காக கனரா வங்கிக்கு மாதம் தவணைத் தொகை ரூ.1256-ஐ சம்பளக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொள்வதற்கு ஒப்புதல் வழங்கியிருந்தார். மேலும், தவணை தொகையை திரும்ப செலுத்துவதற்குரிய கால அவகாசத்திற்கு முன்பாக ரூ.1 லட்சத்தை திரும்பச் செலுத்தியுள்ளார். மீதத் தொகையான ரூ.70 ஆயிரம் மட்டும் கடன் தொகை பாக்கி வைத்துள்ளதால், சம்பளக் கணக்கில் இருந்து பிடித்து கொள்வதற்கு வங்கிக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

அதன்படி ஒவ்வொரு மாதமும் தவணத் தொகையாக ரூ.1256-ஐ பிடித்தம் செய்ய வேண்டிய கனரா வங்கி ஓராண்டு காலம் ஊதிய கணக்கில் இருந்து பிடித்தம் செய்யாமல் இருந்துள்ளது. ஓராண்டு கடந்தபின் ரூ.14,800- ஐ மொத்தமாக பிடித்தம் செய்துள்ளது. இதையடுத்து சம்பள கணக்கிலிருந்து வங்கி மாதம் ரூ.1256-ஐ பிடித்தம் செய்யத் தவறியது மிகப்பெரிய சேவை குறைபாடு என கிளை மேலாளரிடம் தெரிவித்துள்ளார் எமரால்டு ஹேனா பாக்கியவதி.

ஆனால் கிளை மேலாளரோ, தனக்கு தமிழ் தெரியாது என்பதால் உதவி கிளை மேலாளரைச் சந்திக்கும்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பலமுறை வங்கிக்கு அலைந்தும் எமரால்டு ஹேனா பாக்கியவதிக்கு யாரும் சரியான பதில் சொல்லவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான எமரால்டு ஹேனா பாக்கியவதி, வழக்கறிஞர் மூலம் திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆணையம், கனரா வங்கி கிளை மேலாளர் செய்தது சேவை குறைபாடு என்பதால் எமரால்டு ஹேனா பாக்கியவதிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகையாக ரூ. 20 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.25 ஆயிரத்தை வழங்க அந்த வங்கியின் கிளை மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE