ஏழு கட்டமாக நடக்கும் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10-ல் தொடங்குகிறது. இந்நிலையில், பாஜக சார்பில் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடவிருக்கிறார் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா.
பாஜகவின் தேர்தல் அறிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.6) லக்னோவில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. அதில் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி தேர்தல் அறிக்கை வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
இன்று ‘லோக் கல்யாண் சங்கல்ப் பத்ர’ எனும் தலைப்பில் பாஜக வெளியிடவிருக்கும் தேர்தல் அறிக்கையில், வாக்காளர்களைக் கவரும் மெகா அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாஜகவின் தேசியவாதக் கொள்கை, மாநில வளர்ச்சி, ஆன்மிகத் தலங்கள் கட்டுமானம் - புனரமைப்பு உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெறும் என்றும் கருதப்படுகிறது.