பர்கூர் ஜவுளிக் கிடங்கில் தீ விபத்து: கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: பர்கூர் ஜெகதேவி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜவுளிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு முதல் அதிகாலை வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நகரில் ஜெகதேவி செல்லும் சாலையில் தனியார் திருமணம் மண்டபடம் உள்ளது. இந்த மண்டபத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, சின்ன பர்கூரைச் சேர்ந்த வடிவேல் (41) என்பவர் வாடகைக்கு எடுத்து, ஜவுளித்துணிகள் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்து வருகிறார். மேலும், ஜவுளி, துணிகளின் கிடங்காகவும் இந்த மண்டபத்தை அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் மண்டப்பத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் பர்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீஸார் அங்கு வந்த பார்த்தபோது, மண்டபத்தில் இருந்து தீ பற்றி எரிந்தையும் அதிகளவில் புகை வெளியேறியதையும் பார்த்துவிட்டு உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

வேறு அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக உடனடியாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விரைந்து வந்த பர்கூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரைப் பீயச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால், மண்டபம் முழுவதும் தீ பற்றி எரிந்ததால், கட்டுப் படுத்த முடியாமல் திணறினர். தொடர்ந்து, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர்.

இரவு 1 மணி முதல் காலை 8 மணி வரை நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து காரணமாக, வெளியேறி புகையால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்பில் ஜவுளித் துணிகள் எரிந்து நாசமாகின. தீ விபத்து காரணம் குறித்து பர்கூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பர்கூர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE