திருவள்ளூர்: பழவேற்காடு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்துக்குக் காரணமான வாகன ஓட்டியை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள எடமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவர் பழவேற்காடு ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை எடமணியில் இருந்து பசியாவரம் பாலம் வழியாக பழவேற்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பாலம் அருகே பழவேற்காடு - பொன்னேரி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சம்பத் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த சம்பத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டு, விபத்துக்கு காரணமானவரைக் கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருப்பாலைவனம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் பழவேற்காடு-பொன்னேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
» தீ பாதுகாப்பு நடவடிக்கை கட்டாயம்: கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்
» விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக: ப.சிதம்பரம் விமர்சனம்