பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் ஒரு அரசு கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து நுழைய இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினை நாடு தழுவிய அளவில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. கூடவே, இந்து அமைப்புகளின் தூண்டுதலால் சில கல்லூரி மாணவர்கள் காவித்துண்டு அணிந்தும், இந்து மாணவிகள் காவி சால்வே அணிந்தும் கல்லூரிக்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தப் பிரச்சினையில் யார் செய்தது தவறு என்ற விவாதங்கள் நடந்துவருகின்றன. பள்ளிகளைப் பொறுத்தவரையில், ஏழை, பணக்காரர் உள்ளிட்ட எந்த வேறுபாடும் மாணவர்களிடையே தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மத அடையாளங்களை வெளிப்படையாக காட்டிக்கொள்வதற்கும் பொருந்தும். ஆனால், சமீப காலங்களாக பள்ளிகளிலேயே சாதி, மத அடையாளங்களை காட்டுகிற கயிறுகளை கையில் அணிவது, புர்கா அணிவது போன்ற செயல்கள் நடக்கின்றன. இதனை பெற்றோர்கள் சிலரும் ஊக்குவிக்கிறார்கள். எனவே, இது நிச்சயம் தடை செய்யப்பட வேண்டியதுதான்.
ஆனால், கல்லூரிகளைப் பொறுத்தவரையில் இதுபோன்ற கட்டாயம் ஏதுமில்லை. பெற்றோர் நிர்பந்தித்தாலும்கூட, கல்லூரி வாயில் வரையில் அவர்கள் சொன்ன புர்கா போன்ற உடையுடன் சென்றுவிட்டு வகுப்பறைக்குள் சக மாணவர்களைப் போல இருப்பதையே மாணவ, மாணவிகளும் விரும்புகிறார்கள். ஆனால், மதப் பற்று அதீதமாகப் புகட்டப்பட்ட பிள்ளைகளோ பெரிதாக வளர்ந்த பின்னரும், பெற்றோரின் பிற்போக்குத் தனங்களையே தங்களது பெருமையாக கருதத் தொடங்குவதுதான் வினையே.
எனவே, மதச்சார்பற்ற அரசு இதுபோன்ற தடைகளை விதிக்கலாம். அவ்வாறு விதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால், மதத்தின் பெயரால் கட்சி நடத்தி, ஒரு மதத்துக்குச் சார்பாக ஆட்சி நடத்துபவர்கள் சிறுபான்மையினர் மீது இத்தகைய தடையை விதிப்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்திய வரலாற்றில் நேருவைத் தவிர மற்ற அனைத்து பிரதமர்களுமே கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்தான். ஆனால், இன்றைய பிரதமர் மோடி, காசி, பத்ரிநாத் தொடங்கி கார்ப்பரேட் சாமியார்களின் யோகா நிலையத்துக்குச் சென்றால்கூட முழுமையாக அவரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பிரதமர் என்பதை மறந்து, ஒரு மதவெறியரைப் போல தன்னை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொள்கிறார் பிரதமர். பள்ளிப் பிள்ளைகள் ஹிஜாப் அணிவதைத் தடுப்பதற்கு முன்பு, ஒரு பிரதமர், ஒரு முதலமைச்சர் இப்படியான உடைகளையும், மத அடையாளங்களையும் அணிவதைத் தடுப்பதுதான் உண்மையான முற்போக்காகப் பார்க்கப்படும். இல்லை என்றால், மதவெறி பாசிஸ நடவடிக்கையாகவே இதனை அனைவரும் கருதுவார்கள்.