தமிழகத்திலேயே பாஜகவுக்கு வலுவான அடித்தளம் இருக்கும் மாநகராட்சிப் பகுதி நாகர்கோவில். பாஜக கொடுத்த அழுத்தத்திலேயே கடந்த 2019-ல், நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அப்போதைய அதிமுக அரசு. அந்த வகையில், மாநகராட்சியின் முதல் மேயர் எனும் தகுதியை எட்டிப்பிடிக்க பாஜக களத்தில் வேகம் காட்டிவருகிறது. அது சாத்தியமா?
நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. அண்மையில் தெங்கம்புதூர் பேரூராட்சியும், ஆளூர் பேரூராட்சியும் மாநகராட்சிக்குள் புதிதாகச் சேர்த்து, வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டன. நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 2,44,531 வாக்காளர்கள் உள்ளனர். நகரின் மையப்பகுதியில் இருக்கும் வலம்புரிவிளை குப்பைகிடங்கை வேறு இடத்துக்கு மாற்றுவது, பாதாள சாக்கடைப் பணிகளை விரைவாக முடிப்பது, குண்டும் குழியுமான சாலைகளைச் சீர் செய்வது என மக்களின் எதிர்பார்ப்புகளையும், நீண்டகால கோரிக்கைகளையும் பொறுப்பேற்க வரும் மேயர் நிறைவேற்றுவாரா எனும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளன. நீண்ட காலத்துக்குப் பின்பு நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் என்பதால், எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் எனும் தகுதியை எட்டிப்பிடிக்க பாஜக, திமுக, அதிமுக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இது பாஜக கணக்கு!
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியைக் கைப்பற்றிய உற்சாகத்தில் தேர்தலைச் சந்திக்கிறது பாஜக. ஆனால், கடந்த தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பதைவிட, பாஜகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் எம்.ஆர்.காந்தி என்பதால், எளிதில் கைகூடிய வெற்றி என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இயங்கிவருபவர்; குறிப்பாக ஜனசங்க வளர்ச்சிக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவர் எம்.ஆர்.காந்தி. 70 வயதைக் கடந்த அவர், காலுக்கு செருப்பு அணிந்துகொள்ளாதவர். திருமணமும் செய்துகொள்ளாமல் இயக்கப் பணி செய்துவருபவர். இதெல்லாம் மக்களுக்குள் ஏற்படுத்திய சாதகமான அலையும், அதிமுக கூட்டணி எனும் பலமும்தான் எம்.ஆர்.காந்தியைக் கரை சேர்த்தன. ஆனால், இப்போது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது உள்ளாட்சித் தேர்தல். அந்ததந்தப் பகுதியில் செல்வாக்கோடு இருப்பவர்கள் கவுன்சிலராக வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். இதனாலேயே பாஜக, வேட்பாளர்களைப் பார்த்துப் பார்த்து களம் இறக்கியுள்ளது. பாஜக, தங்கள் வேட்பாளர்களையே பலமாகக் கருதுகிறது.
ஏற்கெனவே இருமுறை நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராக இருந்த மீனாதேவ், மேயர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படுகிறார். பாஜக நிர்வாகி முத்துராமனும் மேயர் கனவுடனேயே தேர்தலைச் சந்திக்கிறார். கூட்டணி பலம் இல்லாவிட்டாலும் நாகர்கோவில் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கும் தெம்பில் உற்சாகமாகத் தேர்தலைச் சந்திக்கிறது பாஜக. பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்காத அரசு எனத் தொடங்கி, இந்து விரோத அரசு என்பதுவரை திமுக அரசுக்கு எதிராக வலுவான பிரச்சாரத்தை பாஜக முன்னெடுக்கிறது. ஆனால், அதிமுக மீது வலுவாக முன்வைக்கும் அளவுக்குக் காத்திரமான விமர்சனம் எதுவும் பாஜக தரப்பிடம் இல்லை.
கணக்கு தீர்க்கத் துடிக்கும் திமுக!
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பாஜக ஜெயித்துவிட்ட கோபம், இன்னும்கூட திமுகவுக்கு அடங்கவில்லை. அதற்கு வலுவான காரணமும் இருக்கிறது. திமுக அமைச்சரவையில் மிக இளவயதில் இடம்பெற்றவர் எனும் பெருமைக்குச் சொந்தக்காரர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன். இருமுறை அமைச்சர், 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டச் செயலாளர் என வலம்வரும் சுரேஷ்ராஜன் இந்த முறை வென்றிருந்தால், முக்கியத் துறையின் அமைச்சர் ஆகியிருப்பார். ஆனால், பாஜக அதைத் தட்டிப்பறித்த கோபம் அவருக்குத் தூக்கலாகவே இருக்கிறது. பாஜகவின் வேட்பாளர் எம்.ஆர்.காந்திக்கு அனுதாப அலை வீசினாலும், டெல்லி தலைமையின் உத்தரவில் தொகுதிக்குள் நடந்த பணப்பட்டுவாடாவே தன்னைத் தோல்வியில் தள்ளியது என ஆற்றாமையில் இருக்கிறார் சுரேஷ்ராஜன். அதனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் வென்று, மேயர் பதவியைத் திமுகவுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயமும் தனக்கு இருப்பதை உணர்ந்திருக்கிறார்.
இதனால், கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போதே பாஜகவுக்கு இணையாக குமரியில் வலுவாகக் காலூன்றி இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, நாகர்கோவில் மாநகராட்சியில் 13 சீட்களே ஒதுக்கினார். அதை அவர்களையும் சம்மதிக்க வைத்தது பெரும் ஆச்சரியம்! ஆனால் மொத்தமுள்ள 52 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு வார்டுகூட ஒதுக்கப்படவில்லை. இதனால் தோழர்கள் சில வார்டுகளில் தனித்துக் களம் காண்கின்றனர். ஆனால் திமுக, காங்கிரஸ் கூட்டணி சிறுபான்மை வாக்குகளைப் பெருமளவு வசீகரிக்கும் வாய்ப்பு மிக அதிகம். திமுகவின் மாநகரச் செயலாளர் மகேஷ், மேயர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படுகிறார். ஏற்கெனவே நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற இவர், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத் தலைவராகவும் இருந்தவர். இதனால் மக்களுக்கு நன்கு அறிமுகமாகியுள்ள இவரை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது திமுக. இவருக்கு மாவட்ட அமைச்சர் மனோதங்கராஜின் பரிபூரண ஆசியும் இருக்கிறது.
காய் நகர்த்தும் அதிமுக
அதிமுகவைப் பொறுத்தவரை 52 வார்டுக்கும் முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் 10-வது வார்டில் போட்டியிடும் ஸ்ரீலிஜா மேயர் வேட்பாளராகக் கட்சியினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டார். அதிமுகவின் ஆண்மை பற்றிய நயினார் நாகேந்திரனின் பேச்சு, அக்கட்சியினரை ரொம்பவே உஷ்ணப்படுத்தியுள்ளது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கணிசமான வார்டுகளைக் கைப்பற்ற அதிமுகவும் முட்டிமோதுகிறது. அதிமுக, பாஜக இரு கட்சிகளும் நீண்டகாலமாக ஒரே கூட்டணியில் இருப்பதாலும், நாகர்கோவில் மாநகரில் வசிக்கும் இந்துக்கள் அதிமுக, பாஜக இரண்டு கட்சிகளையும் மென்மையாக அணுகும் தன்மையைக் கொண்டவர்கள். இந்த முறை இரு கட்சிகளும் தனித்தனியாக நிற்பதால், மக்கள் குழம்பிப் போவதையும் பார்க்க முடிகிறது. அதிமுக, பாஜக கூட்டணி அமைந்திருக்குமானால் நாகர்கோவில் சட்டசபைத் தொகுதியில் நடந்த அதிசயம், நாகர்கோவில் மேயர் தேர்தலிலும் கூட மிக எளிதாகவே நிகழ்ந்திருக்கும். ஆனால் அந்தக் கூட்டணி முறிவும், திமுக, கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதும் கடும் போட்டியை உருவாக்கியிருக்கிறது.
திமுகவுக்குத் தலைவலியாகும் எஸ்.டி.பி.ஐ
நாகர்கோவில் மாநகரப் பகுதிக்குள் இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கும் பகுதிகளில், எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது. அக்கட்சியினர் வெற்றிபெறாவிட்டாலும், திமுகவின் வாக்கு வங்கியில் பலத்த சேதத்தை ஏற்படுத்துவார்கள் என்பது இப்போதைய நிலவரம்.
எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நிற்கும் வார்டுகளில் இந்துக்களின் வாக்குகளை வசீகரித்தாலே, பாஜக எளிதாக கரை சேர்ந்துவிடும் எனும் சூழலும் உருவாகியுள்ளது. பாஜகவின் வாக்குகளுக்கு, அதிமுக தலைமேல் தொங்கும் கத்தியாக இருப்பதுபோல், திமுகவின் வாக்குகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தலைமேல் தொங்கும் கத்தியாக உள்ளது. இஸ்லாமியர்களோ, சிஏஏ போராட்டம் தொடங்கி பல தருணங்களில் எஸ்.டி.பி.ஐ உடன் நின்றதை நன்றியோடு நினைவுகூர்கின்றனர்.
இதையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால், மும்முனைப் போட்டியாக இருந்தாலும் கடும் போட்டி என்னவோ பாஜக, திமுக இடையில் தான் நிலவுகிறது எனச் சொல்லலாம். முதல் மேயர் யார் என்பதைவிட, எந்தக் கட்சியால் எந்தக் கட்சி வீழ்ந்தது என்பதுதான் தேர்தலுக்குப் பின் பெரும் விவாதமாக இருக்கப்போகிறது!