பிப். 8-ல் தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்! -சபாநாயகர் அறிவிப்பு

By காமதேனு

“நீட் விலக்கு மசோதா தொடர்பாக வரும் 8-ம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடுகிறது” என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், நீட் விலக்கு சட்ட மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டதுடன், விரைவில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “நீட் விலக்கு மசோதா தொடர்பாக வரும் 8-ம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடுகிறது. தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டலத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும். சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது. மக்கள் நலன் சார்ந்து மாணவர் நலனுக்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் நல்லதே நடக்கும். கூட்டத்தொடருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கம்போல் கரோனா பரிசோதனை செய்து அனுமதிக்கப்படுவர்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE