இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்கிறார் பழனிசாமி: எம்ஆர்கே.பன்னீர்செல்வம் விமர்சனம்

By KU BUREAU

கடலூர்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தால், சட்டம்-ஒழுங்கு சரியில்லைஎன்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி என்று அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் விமர்சித்தார்.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த சின்னதுரையின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். சின்னதுரை குடும்பத்தாரிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குவைத் நாட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் விரைவாகப் பெற்று, சொந்த கிராமங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. அந்தந்த கிராமங்களில் அரசு மரியாதை செலுத்திய பிறகு, அடக்கம் செய்யப்பட்டன. உடனடியாக அரசு அறிவித்த நிவாரணமும் வழங்கப்பட்டு விட்டது.

விவசாயிகள் கோரிக்கை வைக்காமலேயே, தமிழக முதல்வர் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார். இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு விட்டது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பதே எங்களுக்கு முதல் வெற்றி. ஆனால், அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நகைப்புக்கு உரியது. தமிழகம்-புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் தேர்தல் நடந்துள்ளது.

ஆனால், விக்கிரவாண்டி தேர்தலில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறுவது வேடிக்கையாக உள்ளது. அவர்கள் ஏன் போட்டியிடவில்லை என்பது சில காலம் கழித்து தெரிந்துவிடும். தோல்வி பயத்தால்தான் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. இவ்வாறு அமைச்சர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE