தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஜுரம் சூடுபிடித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவும் வலுவாக இருப்பதால் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை திமுக அரசு மிரட்டுவதாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்எல்ஏவுமான தளவாய் சுந்தரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதிமுக அமைப்புச் செயலாளர் தளவாய் சுந்தரம், கட்சியின் வழக்கறிஞரணி நிர்வாகிகள் சுந்தரம், ஜெயகோபால் உள்ளிட்டவர்களோடு இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்தை சந்தித்தார். அப்போது அவர், “கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 110-வது பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள். அதைத் திரும்பப்பெற வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “அதிமுகவினர் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வழக்குப் பதிவு செய்த அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம்” என்றார்.
இதேபோல் ஆளுநருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார் தளவாய் சுந்தரம். அதில், “ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த முத்துகுமார் என்ற வேட்பாளர் மீது அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்த 24 மணி நேரத்திலேயே காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மிரட்டுகிறார்கள். அவர் மீது 7 வழக்குகள் இருந்தன. இதில் 5 வழக்குகள் முடிந்துவிட்டன. இருவழக்குகள்தான் நிலுவையில் உள்ளன. அதையும் அவர் வேட்புமனுவில் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். ஆனாலும் உள்நோக்கத்தோடு அவரிடமும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்னும் நோட்டீஸை விநியோகித்துள்ளனர். குற்றவியல் நடைமுறைச்சட்டம் 110-வது விதியையும் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இப்படி பல ஆராஜகங்கள் அரங்கேறி வருகின்றன’’ என குறிப்பிட்டுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிடும் சுதர்சன், மணி, ரமேஷ் ஆகியோர் மீதும் 110-வது பிரிவு பாய்ந்துள்ளது.
அது என்ன 110 சட்டம்?
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 110-வது பிரிவு என்பது, ‘வழக்கமாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் இனி நாங்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் என்று கோட்டாட்சியரிடம் உறுதி அளிப்பதாகும்’. வழக்கமாக குற்றச் செயலலில் ஈடுபடுவோர் மீது மட்டுமே பிறப்பிக்கப்பட வேண்டிய இச்சட்டம், வழக்குகள் இருந்தாலே பிறப்பிக்கப்படுவதாக எப்போதுமே சர்ச்சை எழுவது குறிப்பிடத்தக்கது. இது, தேர்தல் நேரத்தில் மக்களை சந்தித்து வாக்குசேகரிக்க முடியாத நெருக்கடியில் வேட்பாளரைத் தள்ளும் என குற்றம்சாட்டுகின்றனர் அதிமுகவினர்.